📅 Sunday, 06 September 2026 IST | ஆவணி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 06, 2026 05:03 PM

கல்லணையிலிருந்து காவிரி நீர் திறப்பு

கல்லணையிலிருந்து காவிரி நீர் திறப்பு

தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டங்களின் சம்பா, தாளடி சாகுபடிக்கு தேவையான தண்ணீர் இன்று காலை கல்லணையிலிருந்து திறந்து வைக்கப்பட்டது. இது டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த சாகுபடிக்கு தேவையான தண்ணீர் மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் திறந்துவிடப்படும். இதற்காக மேட்டூர் அணையில் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

ஆனால், இந்தாண்டு மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால், ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை.

இதையடுத்து மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 90 அடியாக உயர்ந்த நிலையில், அணையிலிருந்து தண்ணீரை திறக்க விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று செப்.1 ம் தேதி தமிழக முதல்வர் விஜய் மேட்டூர் அணைக்கு வந்து தண்ணீரை திறந்து விட்டார்.

தொடக்கத்தில் 3 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டு, படிப்படியாக 7 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது. மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் 205 கிலோ மீட்டர் பயணித்து தஞ்சாவூர் மாவட்ட எல்லையான கல்லணைக்கு நேற்று மாலை வந்தது. இதையடுத்து கல்லணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆர். வினோத், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம்.ஷாஜகான், டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்கள், நீர்வளத்துறை மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள், விவசாயிகள் ஆகியோர் கல்லணையில் உள்ள சுற்றுலா மாளிகையிலிருந்து மேளதாளத்தோடு ஊர்வலமாகப் புறப்பட்டு, காவிரி வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் தண்ணீரை திறந்து வைத்தனர். அப்போது நவதானியங்கள், பூக்கள் ஆகியவற்றை தூவி விவசாயம் செழிக்க வேண்டிகொண்டனர்.

முன்னதாக கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் உள்ள ஷட்டர்கள் சீரமைக்கப்பட்டு, வர்ணம் பூசப்பட்டது. மேலும், கரிகால்சோழன் சிலை, மாமன்னன் ராஜராஜசோழன் சிலை, அகத்தியர் சிலை, காவிரி தாய் சிலை, சர் ஆர்தர் காட்டன் சிலை ஆகியவை வர்ணம் பூசப்பட்டிருந்தன.

முதலில் காவிரி, வெண்ணாற்றில் தலா 1,000 கன அடியும், கல்லணைக் கால்வாய், கொள்ளிடத்தில் தலா 500 கன அடியும் வினாடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து படிப்படியாக தண்ணீர் திறக்கப்படும் அளவு உயர்த்தப்படும். இந்த தண்ணீர் திறப்பின் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்படவுள்ளது.