📅 Tuesday, 07 July 2026 IST | ஆனி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News June 09, 2026 08:30 AM

காலையில் ஏவுகணை தாக்குதல்.. மாலையில் மீண்டும் போர் நிறுத்தம்

காலையில் ஏவுகணை தாக்குதல்.. மாலையில் மீண்டும் போர் நிறுத்தம்

டெஹ்ரான்: இஸ்ரேல் - ஈரான் நேற்று காலையில் பரஸ்பரம் ஏவுகணை தாக்குதல்களில் ஈடுபட்டன. இதனால், மேற்காசியாவில் மீண்டும் முழு அளவிலான போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது. இந்நிலையில், தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்துவதாக இரு தரப்பும் நேற்று மாலை அறிவித்தன. இதனால், குழப்ப சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நடத்தும் போர், 100 நாட்களை கடந்துள்ளது. இந்த போரால் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளதால், பல நாடுகளில் பெட்ரோலியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தற்காலிகமாக போரை நிறுத்துவதாக ஈரான் மற்றும் அமெரிக்கா, கடந்த ஏப்., 8ம் தேதி அறிவித்தன. போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. அதே நேரத்தில், அடிக்கடி தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

குறிப்பாக, ஈரானுக்கு ஆதரவு அளிக்கும் லெபனானில் இருந்து செயல்படும் ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பு மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது. இதற்கு பதிலடியாக, மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்துகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளில் உள்ள ஹெஸ்பொல்லா நிலைகளை குறி வைத்து, இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது.

இதற்கு பதிலடியாக, ஈரான் தன் நாட்டிலிருந்து இஸ்ரேலின் ராணுவ நிலைகளை குறிவைத்து, 10க்கும் மேற்பட்ட அதிநவீன ஏவுகணைகளை நேற்று ஏவி தாக்கியது. ஈரானின் ஏவுகணைகளை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள் தடுத்து அழித்தன.

இதையடுத்து, நேற்று அதிகாலை இஸ்ரேல் போர் விமானங்கள் ஈரானுக்குள் நுழைந்து, பெரிய அளவிலான வான்வழி தாக்குதல்களை நடத்தின. ஈரானின் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பெட்ரோலிய ஆலைகள், இத்தாக்குதலில் சேதமடைந்ததாக கூறப்படுகிற-து.

போர் நிறுத்த அறிவிப்புக்கு பின், இஸ்ரேல் - ஈரான் இடையே நடந்த இந்த நேரடி தாக்குதல்களால், மீண்டும் முழு அளவிலான போர் ஏற்படும் அபாயம் உருவானது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரு தரப்பும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

'அமைதிக்கான இறுதி கட்ட பேச்சு தற்போது நடந்து வருகிறது. அறியாமையோ அல்லது முட்டாள்தனமோ இதற்கு முட்டுக்கட்டையாக அமைந்துவிடக்கூடாது. ஆகையால், இஸ்ரேலும், ஈரானும் உடனடியாக தாக்குதல்களை நிறுத்த வேண்டும். முறையான இறுதி ஒப்பந்தம் ஏற்படும் வரை, ஹார்முஸ் ஜலசந்தி மீதான அமெரிக்காவின் பொருளாதார கட்டுப்பாடுகளும், தடைகளும் முழுவீச்சில் தொடரும்' என, சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

லெபனான் மீதான தாக்குதல்களை நிறுத்தினால், இஸ்ரேல் மீதான தாக்குதல்களை நிறுத்த தயாராக இருப்பதாக ஈரான் தரப்பில் நேற்று மாலை கூறப்பட்டது. தற்காலிகமாக இதற்கு உடன்படுவதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, தன் முயற்சியால் இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நிறுத்த முடிவு ஏற்பட்டதாக டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

இந்திய கப்பல் மீது தாக்குதல்! இஸ்ரேல் - ஈரான் இடையே மோதல் தீவிரமடைந்த நிலையில், ஓமன் கடற்பகுதியில் 24 இந்திய மாலுமிகளுடன் சென்ற எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கர்நாடக மாநிலம் கார்வாரில் இருந்து, ஓமன் துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது இத்தாக்குதல் நடத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கப்பல் ஊழியர்கள் உதவி கேட்டு, நம் கடற்படைக்கும், வெளியுறவு அமைச்சகத்துக்கும் அவசர செய்தி அனுப்பினர். அதனடிப்படையில், கப்பலில் இருந்த 24 இந்திய மாலுமிகளும் மீட்கப்பட்டு உள்ளனர். ஹவுதியும் களமிறங்கியது! ஏமனின் இருந்து இயங்கும் ஈரான் ஆதரவு ஹவுதி பயங்கரவாத அமைப்பினர், இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை வீசியுள்ளனர். மேலும், செங்கடலில் இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்களை தாக்குவோம் என எச்சரித்துள்ளது. இந்தியர்களுக்கு எச்சரிக்கை! ஈரானில் உள்ள இந்திய துாதரகம் நேற்று புதிய அவசர பயண எச்சரிக்கை ஒன்றை, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், 'தற்போது மேற்காசியாவில் நிலவி வரும் பதற்றமான சூழலை கருத்தில் கொண்டு, இந்திய மக்கள் யாரும் மறு உத்தரவு வரும் வரை ஈரானுக்கு பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தற்போது ஈரானில் தங்கியிருக்கும் இந்திய மாணவர்கள், வணிகர்கள், சுற்றுலா பயணியர் அனைவரும் கிடைக்கக்கூடிய போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி, ஈரானை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.