📅 Wednesday, 07 October 2026 IST | புரட்டாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 07, 2026 09:04 AM

ஜோகூர் பாரு தீ விபத்தில் சிங்கப்பூர் பெண் உட்பட மூவருக்கு மூச்சுத் திணறல்

ஜோகூர் பாரு தீ விபத்தில் சிங்கப்பூர் பெண் உட்பட மூவருக்கு மூச்சுத் திணறல்

ஜோகூர் பாரு: ‘ஜோகூர் பாரு சிட்டி ஸ்குவேர்’ கடைத்தொகுதியின் அடித்தளத்தில் உள்ள கார் நிறுத்தத்தில் நிகழ்ந்த தீவிபத்தைத் தொடர்ந்து, சிங்கப்பூரர் உட்பட மூன்று பெண்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

அந்தச் சம்பவம் தொடர்பான அவசர அழைப்பு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) பிற்பகல் 3.40 மணியளவில் தங்களுக்குக் கிடைத்ததாக ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது.

சுல்தான் இஸ்கந்தர் சுங்கம், குடிநுழைவு மற்றும் தனிமைப்படுத்தல் வளாகத்துடன் மேம்பாலம் மூலம் சிட்டி ஸ்குவேர் கடைத்தொகுதி இணைக்கப்பட்டுள்ளது.

எஸ்யுவி வாகனம் ஒன்றிலிருந்து பரவத் தொடங்கிய தீ, அருகில் நிறுத்தப்பட்டிருந்த பிற வாகனங்களுக்கும் பரவியதாக லார்க்கின் தீயணைப்பு நிலைய அதிகாரி முகமது சுஹைமி அப்துல் ஜமால் கூறினார்.

தீ மளமளவெனப் பரவியதால் எட்டு கார்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. மேலும் இரண்டு கார்கள் 20 விழுக்காடு முதல் 30 விழுக்காடு வரை சேதமடைந்தன.

கட்டடத்தின் தீத்தடுப்பு அமைப்பு மற்றும் தீயணைப்பு வாகனத்தின் நீர்க்குழாயுடன் இணைக்கப்பட்ட இரண்டு 90 மீட்டர் நீள ரப்பர் குழாய்களைப் பயன்படுத்தி தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தீயில் உருவான புகையைச் சுவாசித்ததால் மூன்று பெண்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவர்களில் 57 வயது டான் லீ ஹுவாங் என்பவர் சிங்கப்பூரர்.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திலேயே அந்த மூவருக்கும் முதலுதவி அளித்தனர். விபத்துக்கான காரணம் மற்றும் மொத்த சேத மதிப்பு குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.