‘ஜெம்’ வீரமணி பாலியல் வழக்கு: விசாரணைக் குழுவில் மேலும் பல அதிகாரிகள்
சென்னை: ‘ஜெம்’ வீரமணி மீது ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.
நான்கு பெண் அதிகாரிகளை உள்ளடக்கிய அந்தக் குழு சென்னை மத்திய குற்றப் பிரிவு கூடுதல் ஆணையர் தேன்மொழி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை அந்தக் குழுவில் ஏழு உதவி ஆணையர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சிறுமியரை பாலியல் வன்கொடுமை செய்ததாக, ‘ஜெம் கிரானைட்ஸ்’ உரிமையாளர் வீரமணி, 84, கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததுடன், சிறுமியருடன் வீரமணி நெருக்கமாக இருந்த சம்பவங்களைக் காணெளியாக எடுத்து, அவரை மிரட்டியே கோடிக்கணக்கில் பணம் பெற்ற சாந்தி, 61, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், 63, ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதிதாக அமைக்கப்பட்ட குழுவிடம், தாங்கள் வீரமணியால் பாதிக்கப்பட்டதாக மூன்று சிறுமியர் புகார் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
வீரமணியால் பாதிக்கப்பட்ட பெண்களும் சிறுமியரும் துணிச்சலாக முன்வந்து புகார் அளிக்குமாறு சிறப்புப் புலனாய்வுக் குழு அழைப்பு விடுத்துள்ளது.
வீரமணியின் பாலியல் வன்முறை தொடர்பாக 2025 அக்டோபர் மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், ஏறக்குறைய 11 மாதங்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 29ஆம் தேதி வீரமணியும் அவரது முக்கியக் கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர்.
மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அந்த மூவரையும் கைது செய்த நிலையில், வீரமணியின் முன்னாள் ஊழியரான கணேசன், 45, கடந்த செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) கைது செய்யப்பட்டார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
சிறுமி ஒருவரை வீரமணி பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதைக் காட்டும் காணொளி குறித்துக் காவல்துறையிடம் தெரிவிக்கத் தவறியதற்காக அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்நிலையில், வீரமணியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 9ஆம் தேதி வரை நீட்டித்து வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) சிறப்பு ‘போக்சோ’ நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக, பிணை கேட்டு சாந்தியும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹனும் அளித்த மனு செப்டம்பர் 29ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.
அந்த மனுவில், "2019ஆம் ஆண்டு நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக ஆறு ஆண்டுகள் தாமதமாக 2025ம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
“இந்தத் தாமதத்துக்கு எந்த விளக்கமும் இல்லாததால் வழக்கில் சந்தேகம் எழுந்துள்ளது. நாங்கள் எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை. புகார்தாரர் பாதிக்கப்பட்டவரல்ல. பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோரோ பாதுகாவலர்களோ புகார் தரவில்லை,” என்று சாந்தியும் அவரது கணவரும் குறிப்பிட்டுள்ளனர்.