📅 Saturday, 19 September 2026 IST | புரட்டாசி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 19, 2026 12:33 PM

இந்தியாவுக்கு அடிச்ச லக்.. நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவுக்கு காயம்.. டி20,டெஸ்டில் சந்தேகம்

இந்தியாவுக்கு அடிச்ச லக்.. நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவுக்கு காயம்.. டி20,டெஸ்டில் சந்தேகம்

இந்தியாவுக்கு அடிச்ச லக்.. நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவுக்கு காயம்.. டி20,டெஸ்டில் சந்தேகம்

மும்பை: இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 தொடரில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா விளையாட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. ஒரு விளம்பரத்தின் ஷூட்டிங்கிற்காக டைவ் அடித்து கேட்ச் பிடிக்க முயன்றபோது அவரது தோள்பட்டை இறங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அக்டோபர் 22-ஆம் தேதி தொடங்கவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், ரச்சினுக்கு ஏற்பட்டுள்ள இந்தக் காயம் அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. ஆக்லாந்தில் ஸ்கை நிறுவனத்துடனான விளம்பரப் படப்பிடிப்பின் போது, ரச்சின் ரவீந்திராவின் வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட முதற்கட்ட மருத்துவப் பரிசோதனைகளில் எலும்பு அல்லது தசை அமைப்பில் பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் மீண்டும் எப்போது விளையாடத் திரும்புவார் என்பது, வரும் வாரங்களில் மேற்கொள்ளப்படும் பயிற்சியை வைத்தே அமையும். எனவே, இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் அவர் பங்கேற்பது தற்போதைக்கு கேள்விக்குறியாகவே உள்ளது.

இது குறித்து அணியின் செயல்பாட்டு மேலாளர் மைக் சாண்டில் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், "இது முற்றிலும் எதிர்பாராத ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்து. ரச்சினுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் நாங்கள் வருத்தமடைந்துள்ளோம். அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் மைதானத்திற்குத் திரும்ப வேண்டும் என்பதே எங்களின் தற்போதைய முன்னுரிமை.

வழக்கம்போல, உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், முன்கூட்டியே திட்டமிடப்பட்டுதான் இந்த படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இருப்பினும், எதிர்பாராத விதமாக இந்த காயம் நேர்ந்துவிட்டது. இது போன்ற நிகழ்ச்சிகளில் இனி வரும் காலங்களில் பாதுகாப்பு நடைமுறைகளை நாங்கள் தொடர்ந்து மறுபரிசீலனை செய்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் நியூசிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராப் வால்டர், அளித்த பேட்டியில் "அடுத்த ஆறு மாதங்களில் எங்களுக்கு முக்கியமான டெஸ்ட் போட்டிகள் வரிசையாக உள்ளதால், ரச்சினை நாங்கள் அவசரப்பட்டு மீண்டும் களமிறக்க விரும்பவில்லை. அவர் தகுந்த மருத்துவக் கண்காணிப்பில் காயம் குணமடையும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

விரைவில் அவர் மீண்டும் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கிறோம்" என்று ராப் வால்டர் கூறியுள்ளார்.இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த ரச்சின் ரவீந்திரா தற்போது காயமடைந்திருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.