இந்தி பெயர்ப்பலகைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு; 2 பொறியாளர்கள் சஸ்பெண்ட்: தமிழக அரசு நடவடிக்கை
இந்தி பெயர்ப்பலகைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு; 2 பொறியாளர்கள் சஸ்பெண்ட்: தமிழக அரசு நடவடிக்கை
சென்னை: சாத்தான்குளம் நாசரேத் மாநில நெடுஞ்சாலையில் புதிதாக வைக்கப்பட்ட வழிகாட்டிப் பலகையில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி மொழியிலும் ஊர்ப் பெயர்கள் இடம்பெற்ற விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் ஆகிய 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நாசரேத் இடையே மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிதாக சாலை அமைக்கப்பட்டு வருகிறது. சாத்தான்குளம் கருமேனி ஆற்றுப்பாலம் அருகே திருச்செந்தூர் சாலை விலக்கு பகுதியில் புதிதாக வழிகாட்டிப் பெயர்ப்பலகை வைக்கப்பட்டது. இதில் தூத்துக்குடி, திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி, நெல்லை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் வழித்தடங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
இந்தப் பெயர்ப்பலகையில் ஊர்களின் பெயர்கள் முதலில் தமிழிலும், அதற்கு அடுத்ததாக இந்தியிலும், 3வதாக ஆங்கிலத்திலும் இடம்பெற்றிருந்தன. மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் பெரும்பாலான இடங்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வழிகாட்டிப் பலகைகள் வைக்கப்பட்டு வரும் நிலையில், சாத்தான்குளத்தில் தமிழுக்கு அடுத்தபடியாக இந்தியில் பெயர்கள் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதுடன், பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையில் விளையாட வேண்டாம் என்றும், மாநில அரசு தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் வலியுறுத்தினார்.இதையடுத்து, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தது. சாலை வழிகாட்டிப் பலகையில் இடம்பெற்றிருந்த இந்தி எழுத்துக்கள் அகற்றப்பட்டன.
மேலும், இந்தி இடம்பெற காரணமாக இருந்ததாகக் கூறப்படும் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் ஆகிய 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு மாறாக செயல்படும் அரசு அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் அரசு எடுத்துள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.