📅 Tuesday, 29 September 2026 IST | புரட்டாசி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 29, 2026 08:03 AM

"இந்த ஒரு சாதனையை மட்டும் செய்தால் விராட் கோலி சச்சினுக்கு சமம் என..” அஸ்வின் ஓபன் டாக்

"இந்த ஒரு சாதனையை மட்டும் செய்தால் விராட் கோலி சச்சினுக்கு சமம் என..” அஸ்வின் ஓபன் டாக்

"இந்த ஒரு சாதனையை மட்டும் செய்தால் விராட் கோலி சச்சினுக்கு சமம் என..” அஸ்வின் ஓபன் டாக்

சென்னை: கிரிக்கெட் உலகின் முக்கிய விவாதமான 'சச்சின் டெண்டுல்கர் - விராட் கோலி, இருவரில் யார் சிறந்தவர்?' என்ற கேள்விக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடியாக பதில் அளித்துள்ளார். சச்சின் டெண்டுல்கரே எப்போதும் முன்னிலையில் இருப்பார் என்று கூறியுள்ள அஸ்வின், ஒரே ஒரு மைல்கல் சாதனையை கோலி நிறைவேற்றினால் இருவரையும் சமமாக ஏற்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 88 பந்துகளில் 139 ரன்கள் விளாசிய விராட் கோலி, தனது 86வது சர்வதேச சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் சச்சினின் 100 சதங்கள் என்ற உலக சாதனையை நெருங்கி வருகிறார். இது குறித்து பேசிய அஸ்வின், "எப்போது கேட்டாலும் சச்சின் தான் முன்னணியில் இருக்கிறார் என்று நான் ஆணித்தரமாக கூறுவேன். அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. முதலாவது, நான் சச்சினின் தீவிர ரசிகன். இரண்டாவது, அவர் விளையாடிய காலத்தின் கடினமான சூழல்கள், ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டின் ஒற்றை நம்பிக்கையாக அவர் சுமந்த சுமை ஆகியவை"

"இரண்டு தலைமுறை வீரர்களை ஒப்பிடுவது முற்றிலும் தவறானது. கோலி எந்த சகாப்தத்தில் 3வது இடத்தில் களமிறங்கி இருந்தாலும் ஒரு சாம்பியன் பேட்டராகவே ஜொலித்திருப்பார், அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் சச்சின் விளையாடிய காலத்தில் இருந்த விதிமுறைகள் மிகவும் கடினமானவை. சச்சின் பெரும்பாலும் பகல் நேர 50 ஓவர் போட்டிகளில் ஆடியுள்ளார். அப்போது ஒரே ஒரு பந்து மட்டுமே பயன்படுத்தப்பட்டது. அதனால் பந்து தேய்ந்து, ரிவர்ஸ் ஸ்விங் ஆகி ரன் குவிப்பது மிகவும் கடினமாக இருக்கும். இன்று இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன, ஃபீல்டிங் கட்டுப்பாடுகளும் பேட்டர்களுக்கு சாதகமாக மாற்றப்பட்டுள்ளன" என்றார்.

இருவரையும் சமமாக கருதுவதற்கான ஒரே ஒரு நிபந்தனை குறித்து அஸ்வின் பேசுகையில், "லாஜிக்காக பார்த்தால் கோலியால் சச்சினின் 100 சதங்கள் சாதனையை முறியடிக்க முடியும். அந்த சாதனையை மட்டும் விராட் கோலி எட்டிவிட்டால், நான் எனது தொப்பியை கழற்றி அவருக்கு தலைவணங்குவேன். அது கிரிக்கெட் வரலாற்றின் மகத்தான சாதனையாக இருக்கும். அதை கோலி செய்து முடித்துவிட்டால், அதன்பின் சச்சினா கோலியா என்ற கேள்விக்கே இடமில்லை. எந்தவித சந்தேகமும் இன்றி இருவருமே ஒரே தட்டில் சமமான இடத்தில் வைக்கப்படுவார்கள்" என்று அஸ்வின் கூறினார்.

விராட் கோலியுடனான தனது தனிப்பட்ட நட்பு குறித்து பேசிய அஸ்வின், "நாங்கள் இருவருமே களத்தில் மிகுந்த ஆக்ரோஷமானவர்கள். ஆரம்பத்தில் எங்கள் நட்பு சாதாரணமாக இருந்தாலும், கடந்த 5 முதல் 7 ஆண்டுகளில் எங்கள் இருவருக்குமான புரிதலும் நட்பும் மிக ஆழமாக மாறியுள்ளது" என்று கூறினார்.