"வேகப்பந்து வீச்சை கண்டு பயந்துபோய் போக மாட்டேன் என்று..”.. திலக் வர்மாவை வெளுத்த ஸ்ரீகாந்த்
"வேகப்பந்து வீச்சை கண்டு பயந்துபோய் போக மாட்டேன் என்று..”.. திலக் வர்மாவை வெளுத்த ஸ்ரீகாந்த்
சென்னை: இங்கிலாந்து மற்றும் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர்களில் இந்திய அணி தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், துணை கேப்டன் திலக் வர்மாவை வேகப்பந்து வீச்சுக்கு எதிராக விளையாட வைக்காமல் இந்திய அணி நிர்வாகம் பாதுகாத்து வருவதாக முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாகச் சாடியுள்ளார்.
தனது யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த், திலக் வர்மாவின் பேட்டிங் திறமை மற்றும் அவரது பலவீனம் குறித்துப் பரபரப்பாகப் பேசினார். "அவர் ஏற்கனவே துணை கேப்டனாக இருக்கிறார், விரைவில் கேப்டனாகவும் மாறிவிடுவார் போலிருக்கிறது. பவுன்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சைக் கண்டு பயந்து, தானே இப்போது பேட்டிங் செய்யப் போக மாட்டேன் என்று திலக் வர்மா கூறியிருப்பார் போலிருக்கிறது. திலக் வர்மாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவருக்குப் பதிலாக நான் சஞ்சு சாம்சனையே அணியில் விளையாட வைப்பேன்" என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
மேலும், அணி நிர்வாகத்தின் செயல்பாடுகளை விமர்சித்த அவர், "திலக் வர்மாவை உங்களது முக்கிய பேட்ஸ்மேனாகவும், துணை கேப்டனாகவும் நியமித்துள்ளீர்கள். ஆனால், ஏன் அவரை வேகப்பந்து வீச்சுக்கு எதிராக விளையாட வைக்காமல் பாதுகாக்கிறீர்கள்? அவருக்கு முன்னதாக அக்சர் படேலை ஏன் களம் இறக்குகிறீர்கள்? திலக் வர்மாவுக்கு ஷார்ட்-பிட்ச் பந்துகளை எதிர்கொள்வதில் பலவீனம் இருக்கிறது என்பது அணி நிர்வாகத்திற்குத் தெரிந்தே இந்த வேலையைச் செய்கிறார்கள். அவரை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன், ஆனால் அவர்கள் செய்வதில்லை" என்று ஸ்ரீகாந்த் ஆவேசமாக பேசினார்.
துணை கேப்டனாகப் பொறுப்பேற்ற பிறகு திலக் வர்மா 19, 55, 13, 24* மற்றும் 3 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அயர்லாந்துக்கு எதிராக 55 ரன்கள் அடித்ததை தவிர, இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் அவரால் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.
டி20 உலகக்கோப்பையை வென்ற சில மாதங்களிலேயே கேப்டன் சூர்யகுமார் யாதவ் அணியில் இருந்தே நீக்கப்பட்டார். அடுத்து அக்சர் படேலின் துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டு, ஸ்ரேயாஸ் ஐயர் - திலக் வர்மா ஜோடி வசம் இந்திய டி20 அணி ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு இந்திய அணி தான் ஆடிய ஐந்து போட்டிகளில் ஒரு வெற்றி கூட பெறாமல் கடும் சரிவைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.