துணை கேப்டனை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனை சேர்ப்பதா? இதெல்லாம் வேலைக்கே ஆகாது.. பிளேயிங் 11 குளறுபடி
துணை கேப்டனை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனை சேர்ப்பதா? இதெல்லாம் வேலைக்கே ஆகாது.. பிளேயிங் 11 குளறுபடி
நாட்டிங்ஹாம்: இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி 2 போட்டிகளில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, ஆடும் லெவனில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்துப் பெரும் விவாதங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, பேட்டிங்கில் சொதப்பி வரும் துணை கேப்டன் திலக் வர்மாவை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனை மிடில் ஆர்டரில் கொண்டு வர வேண்டும் என்ற பேச்சுக்கு முன்னாள் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய அபிஷேக் நாயர், சஞ்சு சாம்சனை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும் என்பதற்காக அவரது பேட்டிங் வரிசையை மாற்றிப் பரிசோதனை செய்யக் கூடாது என்று இந்திய அணி நிர்வாகத்தை எச்சரித்துள்ளார்.
"சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க விரும்பினால், அவர் நன்றாக ஆடக் கூடிய டாப் 3 பேட்டிங் வரிசையிலேயே களம் இறக்க வேண்டும். அதை விடுத்து அவரை 4, 5 அல்லது 6-வது இடத்தில் களம் இறக்குவது வேலைக்கே ஆகாது. அந்த வரிசைகளில் விளையாடி அவர் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை" என்று அபிஷேக் நாயர் கூறியுள்ளார்.
புள்ளிவிவரங்களின்படி, டி20 கிரிக்கெட்டில் டாப் 3 வரிசையில் சாம்சனின் சராசரி 30-க்கு மேல் உள்ளது. ஆனால், 4-வது வரிசையில் விளையாடிய 65 இன்னிங்ஸ்களில் அவரது சராசரி 22.63 ஆகவும், 5-வது வரிசையில் விளையாடிய 14 இன்னிங்ஸ்களில் அவரது சராசரி வெறும் 15.33 ஆகவும் சரிந்துள்ளது. எனவே, டாப் 3-ல் இடம் தர முடியாவிட்டால் சாம்சனை விளையாட வைக்காமல் இருப்பதே நல்லது என்பது அவரது கருத்தாகும்.
மறுபுறம், இந்திய அணியின் புதிய துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள திலக் வர்மாவும் பேட்டிங்கில் கடுமையாகத் திணறி வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தில் அவர் ஒரு போட்டியில் 56 ரன்களை அடித்ததை தவிர, மற்ற 5 இன்னிங்ஸ்களிலும் 20 ரன்களைக் கூட தாண்டவில்லை. கடந்த போட்டியில் 11 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து அவர் விக்கெட்டை இழந்தார். பொதுவாக 3-வது வரிசையில் ஆடும் திலக் வர்மா, இஷான் கிஷனுக்காகத் தனது இடத்தை இழந்து நடுவரிசையில் விளையாடுவதால் ஆடும் லெவனில் குளறுபடிகள் ஏற்படுகின்றன.
தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரும், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் உள்ள தட்பவெப்பம் மற்றும் பிட்ச் நிலைகளை இந்திய வீரர்கள் சரியாகக் கணிக்கத் தவறிவிட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார். அவசரப்பட்டு அணியில் தேவையின்றி மாற்றங்களைச் செய்து குளறுபடிகளை ஏற்படுத்தாமல், வீரர்கள் சூழலுக்குத் தகவமைத்துக் கொண்டு பொறுப்புடன் விளையாட வேண்டும் என்பதே தற்போதைய தேவையாக உள்ளது.