📅 Wednesday, 08 July 2026 IST | ஆனி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News July 06, 2026 01:00 PM

மீண்டும் இந்தியா

மீண்டும் இந்தியா

மீண்டும் இந்தியா - பாகிஸ்தான்.. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தேதிகள் வெளியானது.. எந்த நாட்டில்?

சென்னை: கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் கொண்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ளது. இதற்கான உத்தேச தேதிகள் மற்றும் போட்டி நடைபெறும் நாடு குறித்த முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. வழக்கம் போல இத்தொடரிலும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அனல் பறக்கும் மோதலை ரசிகர்கள் மீண்டும் காண உள்ளனர்.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் 2027-ம் ஆண்டுக்கான ஆண்கள் ஆசிய கோப்பை தொடருக்கான தேதிகளை இறுதி செய்துள்ளது. அதன்படி, இத்தொடரை நடத்தும் உரிமையை வங்கதேசம் தக்க வைத்துக் கொள்ளவுள்ளது. 2027ஆம் ஆண்டு ஜூன் 18 முதல் ஜூலை 4 வரை இந்த போட்டிகள் வங்கதேசத்தில் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 2027 இறுதியில் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக, அதற்குத் தயாராகும் விதமாக இத்தொடர் 50 ஓவர் ஒருநாள் போட்டி வடிவில் நடத்தப்படவுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் தங்களுக்குள் நிலவும் அரசியல் பதற்றம் காரணமாக ஒருவருக்கொருவர் நாட்டில் சென்று விளையாடுவதில்லை. இதனால் ஆசிய கோப்பை போன்ற நடுநிலையான தொடர்கள் மட்டுமே இரு அணிகளும் மோதும் களமாக அமைகின்றன. அந்த வகையில் வங்கதேசம் இந்த இரு அணிகளும் மோதுவதற்கான சிறந்த நடுநிலை மைதானமாக அமையவுள்ளது.

2026 ஐபிஎல் தொடரில் வங்கதேச வீரர் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்ட விவகாரம் மற்றும் சில காரணங்களால் இந்தியா - வங்கதேசம் இடையே லேசான சுணக்கம் ஏற்பட்டது. இதனால் ஆசிய கோப்பை வங்கதேசத்தில் இருந்து மாற்றப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவரான தமீம் இக்பால், பிசிசிஐ-யுடன் நல்லுறவை வளர்க்க முன்னுரிமை அளித்து வருவதால், வங்கதேசத்திலேயே இத்தொடர் நடப்பது உறுதியாகியுள்ளது.

இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஒரு தகுதி பெறும் அணி என மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 13 போட்டிகள் நடத்தப்படவுள்ளன. நடப்பு சாம்பியனான இந்திய அணி, இத்தொடரை வென்று தங்களது ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் களமிறங்கும். பாகிஸ்தான் அணி வழக்கம் போல ஒரு போட்டியிலாவது இந்திய அணியை வீழ்த்த வேண்டும் என முயற்சிக்கும்.