இது தான் நியாயம்! இது தான் தர்மம்.. பயிற்சியாளர் மோர்னே மோர்கல் சொன்ன விசயம்
இது தான் நியாயம்! இது தான் தர்மம்.. பயிற்சியாளர் மோர்னே மோர்கல் சொன்ன விசயம்
மான்செஸ்டர்: இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி இன்று இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு மான்செஸ்டர் நகரில் தொடங்குகிறது. இந்த போட்டியில் 15 வயது வீரரான வைபவ் சூர்யவன்சி அறிமுகம் ஆவாரா? இல்லை பெஞ்சில் அமர்த்தப்படுவாரா என்ற கேள்விக்கு பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் விளக்கம் அளித்துள்ளார்.
2026 ஐபிஎல் தொடரில் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய டி20 அணியில் இந்த இளம் வீரர் இடம்பிடித்தார். இருப்பினும், அயர்லாந்துக்கு எதிரான இரண்டு தோல்விகளிலும் சூர்யவன்ஷிக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் முதல் போட்டியிலும் இந்த இடதுகை பேட்டர் பெஞ்சில் அமரவைக்கப்பட்டதால், அவரது அறிமுகம் குறித்த கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் அதிகரித்தன.
இது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த மோர்னே மோர்க்கல், "அவரை நேரடியாகக் களமிறக்குவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. உலகக் கோப்பைகளை வென்று, கடினமான சூழ்நிலைகளில் சிறப்பாகச் செயல்பட்ட வீரர்களுக்கு ஆதரவளிப்பதே முக்கியம். அதன் பிறகு அங்கிருந்து அணியை வலுப்படுத்தி, இந்த சூழ்நிலைக்கு ஏற்ப நமது டாப் ஆர்டரை எவ்வாறு பலப்படுத்தலாம் என்று பார்க்க வேண்டும். இறுதியில், மைதானத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே முக்கியம். மேலும், வீரர்களை அவர்களின் வழக்கமான பேட்டிங் வரிசையை மாற்றி விளையாட வைக்க நாங்கள் விரும்பவில்லை" என்று கூறினார்.
"டி20 கிரிக்கெட்டில் உலகின் நம்பர் 1 பேட்டரான அபிஷேக் சர்மா எங்களிடம் இருக்கிறார் என்பதை நாம் மதிக்க வேண்டும். சஞ்சு சாம்சன் உலகக் கோப்பையில் சிறந்த வீரராக இருந்தார் மற்றும் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டார். பயிற்சியாளர்களாக, எங்கள் வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு ஆதரவளிப்பது மட்டுமே சரியான விஷயமாக இருக்கும். ஆம், ஒரு இளம் வீரர் அணியின் கதவைத் தட்டுகிறார், அது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் டாப் ஆர்டரில் உள்ள அந்த இருவருக்கு மட்டுமல்ல, அணியின் மற்ற வீரர்களுக்கும் நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்பதைக் காட்டுவது ஒரு நல்ல அறிகுறியாகும்" என்றார்.
இந்திய அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான சஞ்சு சாம்சன் தற்சமயம் போதிய ஃபார்ம் இன்றி தவித்து வருகிறார். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகளில் சராசரியாக வெறும் இரண்டு ரன்கள் வீதம், மொத்தம் 6 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இது டாப் ஆர்டரில் அவரது இடம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி எவ்வாறு இணைந்துள்ளார் மற்றும் பயிற்சி அமர்வுகளில் அவர் எவ்வாறு செயல்பட்டுள்ளார் என்பது குறித்து மோர்னே மோர்க்கல் பாராட்டியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து தொடரில் வைபவ் அறிமுகமானால், சச்சின் டெண்டுல்கரை (16 ஆண்டுகள் மற்றும் 205 நாட்கள்) முந்தி, மிகக் குறைந்த வயதில் (15 வயது) அறிமுகமான இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைப்பார்.
"அவர் அணியுடன் மிகவும் நன்றாகப் பழகிவிட்டார். நீங்கள் வீரர்களை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்தால், அவருடன் எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் ஏற்கனவே பதிவிடப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். அணியினர் அவரை வரவேற்ற விதம் மிகவும் அற்புதம். 15 வயதில் சர்வதேச அரங்கில் நுழைவது என்பது பயமுறுத்துவதாக இருக்கலாம். ஆனால், நாங்கள் நடத்திய சில வலைப் பயிற்சி அமர்வுகளில், அவர் தனது ஆட்டத்தால் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளார்" என்று சூர்யவன்ஷி குறித்து மோர்கெல் கூறினார்.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரைப் பொறுத்தவரை, முதல் போட்டி கனமழை காரணமாக எந்தவொரு முடிவும் இன்றி ரத்தானது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 189 ரன்கள் குவித்த நிலையில், பலத்த மழை காரணமாக இரண்டாவது இன்னிங்ஸ் தடைபட்டது குறிப்பிடத்தக்கது.