IND A vs SL A: 2வது டெஸ்டிலும் தமிழக வீரர் சாய் சுதர்சன் அபார சதம்.. பலமான நிலையில் இந்தியா ஏ
IND A vs SL A: 2வது டெஸ்டிலும் தமிழக வீரர் சாய் சுதர்சன் அபார சதம்.. பலமான நிலையில் இந்தியா ஏ
காலே: இலங்கை ஏ அணிக்கு எதிராக இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணியின் நட்சத்திர வீரர் சாய் சுதர்சன் 168 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் இந்த தொடரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சாய் சுதர்சன் சதம் அடித்திருக்கிறார்.
ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் சாய் சுதர்சனுக்கு டெஸ்ட் அணியில் நம்பர் மூன்றாவது வீரராக களமிறங்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனினும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய தாக்கத்தை இதுவரை சர்வதேச அரங்கில் ஏற்படுத்தவில்லை. இந்த சூழலில் இலங்கை அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் அவர் பட்டையை கிளப்பி வருகிறார்.
இந்த ஆட்டத்தில் மறுபுறம் நட்சத்திர வீரர் தேவுதத் படிக்கல் ஆறு ரன்களில் சதத்தை தவறவிட்டார். 152 பந்துகளை எதிர்கொண்ட அவர் 94 ரன்கள் சேர்த்தார். இதேபோன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 42 பந்துகளை எதிர் கொண்டு 13 ரன்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார்.
இந்த அணியின் கேப்டன் துருவ் ஜூரல் அதிரடியாக விளையாடி 88 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதனால் இந்திய ஏ அணி 104 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 406 ரன்கள் குவித்து இருக்கிறது. இதன் மூலம் இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 40 ரன்கள் கூடுதலாக இந்திய ஏ அணி அடித்திருக்கிறது.
டாஸ் வென்ற இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பந்து வீசியது. முதலில் விளையாடிய இலங்கை அணி 366 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.அண்மையில் இந்திய ஒரு நாள் அடியில் அறிமுகமான குர்னூர் பிரார் இந்த டெஸ்ட் போட்டியில் 22 ஓவர்கள் வீசி 77 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ரஞ்சி கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்ட அக்யூப் நபி 18 ஓவர்கள் வீசி 59 ரன்களை விட்டுக் கொடுத்து விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை. யாஷ் தாகூர் இரண்டு விக்கெட்டுகளையும், சரண் ஜெயின் நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். தற்போது இந்திய அணிக்கு கைவசம் 6 விக்கெட் இருப்பதால், 150 ரன்கள் கூடுதலாக முன்னிலை எடுத்து பின் இலங்கை அணியை பேட்டிங் செய்ய வைக்கும். நான்காவது நாள் ஆட்டம் நாளை கடைசியாகும். தற்போது மழை காரணமாக போட்டி தடைப்பட்டு இருக்கிறது.