ஈரான் மீது தாக்குதலை துவங்கியது அமெரிக்கா; அப்பாச்சி ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடி
நமது நிருபர்
அமெரிக்காவின் அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்ட சில மணிநேரங்களுக்கு பிறகு ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியின் மீது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அப்பாச்சி ஹெலிகாப்டர் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியதை உறுதிப்படுத்தினார். ஈரானுடனான மோதல் தொடங்கியதிலிருந்து அமெரிக்க ராணுவத்தின் AH-64 அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்டதாக பதிவுசெய்யப்பட்ட முதல் சம்பவம் இதுவாகும்.
இது குறித்து, அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நேற்று இரவு ஹார்முஸ் ஜலசந்தி அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த நமது அதிநவீன அப்பாச்சி ஹெலிகாப்டர்களில் ஒன்றை ஈரானியர்கள் சுட்டு வீழ்த்தியதாக நமது ராணுவம் எனக்குத் தெரிவித்துள்ளது. இந்த ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இருப்பினும், அமெரிக்கா இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில், அமெரிக்கப் படைகள் ஈரானுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்கப்படை மத்திய தலைமையகம் அறிவித்துள்ளது.இது குறித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
நேற்று அமெரிக்க ராணுவத்தின் அப்பாச்சி ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக, அதிபர் டிரம்பின் வழிகாட்டுதலின் பேரில், அமெரிக்க படை ஈரானுக்கு எதிராகத் தற்காப்புத் தாக்குதல்களைத் தொடங்கின. ஈரானின் ஆக்கிரமிப்புக்கு இது ஒரு தகுந்த பதிலடியாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அப்பாச்சி ஹெலிகாப்டர் ஈரான் படைகளால் வேண்டுமென்றே குறிவைக்கப்படவில்லை என்று ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார். ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்தியதற்கு ஈரான் பொறுப்பல்ல என்றும், ஹார்முஸ் ஜலசந்தியில் தற்போது நிலவும் சூழலில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழக்கூடும். எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம் என்று ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர்.