📅 Friday, 11 September 2026 IST | ஆவணி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 11, 2026 01:33 PM

ஈரான் ஏன் ஜோர்டானை குறிவைக்கிறது? பின்னணி என்ன?

ஈரான் ஏன் ஜோர்டானை குறிவைக்கிறது? பின்னணி என்ன?

ஈரான் ஏன் ஜோர்டானை குறிவைக்கிறது? பின்னணி என்ன?

அமெரிக்கா–ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தை நோக்கி ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. ஜோர்டான் ராணுவம் வெளியிட்ட தகவலின்படி, கடந்த 8ஆம் தேதி இரவு முதல் 9ஆம் தேதி காலை வரை மொத்தம் 20 ஏவுகணைகள் ஏவப்பட்ட நிலையில், அவற்றில் 18 ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டன. மீதமிருந்த இரண்டு ஏவுகணைகள் மக்கள் நடமாட்டம் இல்லாத திறந்தவெளிப் பகுதிகளில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

ஜோர்டானின் Muwaffaq Salti Air Base, பொதுவாக Al-Azraq Air Base என்று அழைக்கப்படும் விமானப்படைத் தளமே ஈரானின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் மோதலில் இத்தளம் தொடர்ந்து குறிவைக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் தற்போதைய நிலவரப்படி அல்-அஸ்ராக் மீது ஈரான் 10 முறை தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஈரான் ஏன் அதைத் தாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

Al-Azraq Air Base தளத்தில் அமெரிக்க ராணுவப் படைகள் மற்றும் விமானங்கள் செயல்பட்டு வருகின்றன. ஈரானின் Islamic Revolutionary Guard Corps (IRGC), அல்-அஸ்ராக் தளத்தில் இருந்த F-35, F-16 மற்றும் F-15 போர் விமானங்களுக்கான பராமரிப்பு, தயாரிப்பு மற்றும் நிலைநிறுத்தும் பகுதிகளையும், விமானங்களைப் பாதுகாக்கும் ஹேங்கர்களையும் குறிவைத்ததாக தெரிவித்துள்ளது.

எனினும், இந்தத் தாக்குதலில் அமெரிக்க ராணுவச் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து அமெரிக்கா உறுதியான தகவலை வெளியிடவில்லை. அமெரிக்க அதிகாரி ஒருவர், ஒருங்கிணைந்த வான் மற்றும் ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளால் ஈரானின் தாக்குதல்களை தடுத்து நிறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

அல்-அஸ்ராக் விமானப்படைத் தளம் இரண்டு நீண்ட ஓடுபாதைகளைக் கொண்ட மிகப்பெரிய ராணுவத் தளமாகும். அமெரிக்காவைப் பொறுத்தவரை, இது முக்கியமான தளவாட மற்றும் விமான நடவடிக்கை மையமாக கருதப்படுகிறது.

அமெரிக்கா–ஜோர்டான் இடையிலான 2021 பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி, ஜோர்டானில் உள்ள 12 ராணுவத் தளங்களை அமெரிக்கப் படைகளும் ஒப்பந்தப் பணியாளர்களும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் C-17 போக்குவரத்து விமானங்கள் மற்றும் சுமார் 60 போர் விமானங்களுக்கான முக்கிய தளவாட மையமாக அல்-அஸ்ராக் மாறியதாக பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், சிரியா மற்றும் ஈராக் பகுதிகளில் உளவு, கண்காணிப்பு மற்றும் இலக்கு அடையாளம் காணும் நடவடிக்கைகளுக்கும் ஜோர்டானின் விமானப்படைத் தளங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

இதனால், ஈரானிலிருந்து அதிக தொலைவில் இருந்தபடியே அமெரிக்கா தனது விமான மற்றும் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய முக்கியமான தளமாக ஜோர்டான் விளங்குகிறது. வளைகுடா நாடுகளைக் காட்டிலும் ஜோர்டான் ஈரானிலிருந்து தொலைவில் இருப்பதால், ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களுக்கு எதிரான ஒரு முக்கியமான பாதுகாப்பு இடமாகவும் பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாகவே, அமெரிக்காவின் பிராந்திய ராணுவ நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகிக்கும் அல்-அஸ்ராக் தளம், தற்போது ஈரானின் தாக்குதல்களுக்கு முக்கிய இலக்காக மாறியுள்ளது. மேலும் ஓமன் வளைகுடா மற்றும் கார்க் தீவு அருகே அமெரிக்கப் படைகள் ஈரானின் 5 எண்ணெய் டாங்கர் கப்பல்களைச் சுட்டு மூழ்கடித்தன. இதற்குப் பதிலடியாக, இந்த முறை அமெரிக்காவைத் தண்டிக்கும் நோக்கில் ஈரான் இத்தளத்தின் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.

அமெரிக்காவின் வான்வழி வலிமையை முடக்குதல்:

இத்தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்களின் தங்குமிடங்கள், பராமரிப்பு மையங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை அழிப்பதன் மூலம் அமெரிக்காவின் போர் உத்தியைச் சிதைக்க ஈரான் முயற்சிக்கிறது. மத்திய கிழக்கு மோதல்களில் ஈரான் ஏவும் ஏவுகணைகளை இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தளங்களை அடையவிடாமல் ஜோர்டான் தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் சுட்டு வீழ்த்தி வருகிறது. இதனால் ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்களை ஈரான் தனது நேரடி இலக்காக மாற்றியுள்ளது.