ஹைதராபாத் ரஞ்சி அணிக்கு புதிய கேப்டன்.. முகமது சிராஜுக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு.. பின்னணி என்ன?
ஹைதராபாத் ரஞ்சி அணிக்கு புதிய கேப்டன்.. முகமது சிராஜுக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு.. பின்னணி என்ன?
ஹைதராபாத்: 2026-27 ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் சாமா மிலிந்த் அணியின் துணை கேப்டனாகச் செயல்படுவார் என ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2026-27 ரஞ்சி கோப்பை சீசன் வரும் அக்டோபர் 11 அன்று தொடங்குகிறது. தனது முதல் லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி திரிபுராவை எதிர்கொள்கிறது. ஹைதராபாத் அணி எலைட் குரூப் பி பிரிவில் சவுராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப், ஆந்திரா, சத்தீஸ்கர், அசாம் மற்றும் திரிபுரா ஆகிய பலம் வாய்ந்த அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.
இதற்கு முன் 2025-26 ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பை தொடரில் முகமது சிராஜ் இரண்டு போட்டிகளில் ஹைதராபாத் அணியின் கேப்டனாக செயல்பட்டார். மும்பை மற்றும் சட்டீஸ்கர் அணிகளுக்கு எதிரான அந்த இரண்டு போட்டிகளிலும் ஹைதராபாத் அணி வெற்றி பெறவில்லை. மும்பை அணியிடம் தோல்வி அடைந்த ஹைதரபாத் அணி, சட்டீஸ்கர் அணியுடன் டிரா மட்டுமே செய்தது. அதன் பிறகு தற்போது சிராஜ் மீண்டும் ஹைதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க இருக்கிறார்.
துலீப் டிராபி இறுதிப் போட்டியில் தென் மண்டல அணியின் வேகப்பந்து வீச்சை வழிநடத்திய சிராஜ், தற்போது ஹைதராபாத் ரஞ்சி அணியை வழிநடத்தும் மிகப்பெரிய பொறுப்பைப் பெற்றுள்ளார். தனது அபார பந்துவீச்சு மற்றும் கேப்டன்சி மூலம் ஹைதராபாத் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற இலங்கை டெஸ்ட் தொடரில் முகமது சிராஜின் பந்துவீச்சு வேகம் மணிக்கு வழக்கமான 140 கி.மீ-ல் இருந்து 120 கி.மீ-க்கு குறைந்தது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்தத் தொடரில் 2 போட்டிகளில் 44 ஓவர்கள் வீசி அவர் 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்தார்.
இது குறித்துப் பேசிய சிராஜ், "2 மாத இடைவெளிக்குப் பிறகு களமிறங்கியதால் எனது ரன்-அப் மற்றும் பந்துவீச்சு ரிதம் சற்றே பாதிக்கப்பட்டது. ஆனால் சென்னையில் நடைபெற்ற துலீப் டிராபி இறுதிப் போட்டியில் மீண்டும் எனது இயல்பான வேகம் மற்றும் ரிதத்தை மீட்டுவிட்டேன். அணிக்கு விளையாடும் போது எந்தவித காரணங்களையும் சொல்ல முடியாது; நமது முழு திறமையையும் அர்ப்பணிப்புடன் வெளிப்படுத்த வேண்டும்" என்று கூறினார்.