``எதுவுமே சரியில்லை...’’
``எதுவுமே சரியில்லை...’’ - குமுறும் தோழமைகள்... சிக்கலில் த.வெ.க?
சமீபத்தில் சட்டமன்றத்தில் ஆதவ் அர்ஜுனா பேசும்போது, `தமிழகத்திலிருந்து எதிர்காலத்தில் ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்.
ஆட்சி அமைக்க ஆதரவளித்திருக்கும் தோழமைக் கட்சிகளைச் சீண்டிப் பார்க்கத் தொடங்கியிருக்கிறது தமிழக வெற்றிக் கழகம். பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரஸும், அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் விஷயத்தில் இடதுசாரித் தலைவர்களையும் கொந்தளிக்கவைத்து விட்டனர் ஆட்சியாளர்கள். ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் இயற்றாததால் வி.சி.க-வும் அப்செட். `ஆட்சியமைக்க உதவியவர்களை த.வெ.க அரவணைக்கத் தவறுவது ஏன்?’ என்ற கேள்வி தமிழக அரசியல் அரங்கில் எழுந்திருக்கிறது!
2026 சட்டமன்றத் தேர்தலில் 107 இடங்களில் வென்ற தமிழக வெற்றிக் கழகம், தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டு வென்ற காங்கிரஸ், இடதுசாரிகள், வி.சி.க., ஐ.யு.எம்.எல் உறுப்பினர்கள் என 13 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. மைனாரிட்டி அரசை நடத்திவரும் த.வெ.க., தோழமைக் கட்சிகளை அரவணைப்புடன் நடத்த மறுப்பதால் நாளொரு குழப்பம் வெடித்துவருகிறது. த.வெ.க ஆட்சியை அசைத்துப் பார்க்க திராவிடக் கட்சிகள் முயலும் சூழலில் தோழமைக் கட்சிகளின் அதிருப்திக் குரல்கள் ஆபத்தானது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
நம்மிடம் பேசியவர்கள், “107 தொகுதிகளில் த.வெ.க வென்றிருந்த நிலையில், முடிவுகள் வெளிவந்த மறுதினமே த.வெ.க-வுக்கு ஆதரவளித்தது காங்கிரஸ். த.வெ.க-வுக்கு ஆதரவளிக்கச் சொல்லி சி.பி.எம்., சி.பி.ஐ கட்சிகளின் தேசியத் தலைமைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் ராகுல் காந்தி. தமிழ்நாட்டில் த.வெ.க ஆட்சியை நிறுவ ராகுல் பாடுபட்டதன் ஒரே நோக்கம், 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு விஜய் செல்வாக்கு தென்மாநிலங்களில் கைகொடுக்கும் என்பதுதான். ஆனால், த.வெ.க ஆட்சியமைத்த 100-வது நாளிலேயே காங்கிரஸைச் சீண்டத் தொடங்கியிருக்கிறது த.வெ.க.
`தமிழ்நாட்டை ஆளுகிற சக்தி மட்டுமல்ல... எதிர்காலத்தில் நாட்டையே ஆளுகிற சக்தி படைத்தவர் நம்முடைய தலைவர்’ என்று சீனியர் அமைச்சரான செங்கோட்டையன் புகழ்பாட, `இன்றைய முதல்வர், நாளைய பிரதமர் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. நாம் அனைவரும் அதை நோக்கியே பயணிப்போம்’ என்று அறைகூவல் விடுத்திருக்கிறார் அமைச்சர் ஜெகதீஸ்வரி. முதல்வர் விஜய்யின் நண்பரும், மீன்வளத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத், `தளபதி எங்கே போனாலும் ஃபோகஸ் இருக்கும். டெல்லிக்குப் போனாலும் அந்த ஃபோகஸ் இருக்கும். நாளைக்கு டெல்லியே கூட அவருடையதாக இருக்கலாம்’ என்றார்.
இதற்கு ரியாக்ட் செய்த காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், `த.வெ.க-வினர் ரசிகர் மன்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். விஜய் முதலமைச்சராவதற்கு முதலில் ஆதரவு தெரிவித்தது காங்கிரஸ்தான். இல்லை யென்றால், மத்திய அமைச்சர் அமித் ஷா, அன்றைக்கே கதையை முடித்திருப்பார். அவர்கள் கட்சியை உடைத்து, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கியிருப் பார்கள்” என்று சூடாக பதிலடி கொடுத்திருக் கிறார். அமைச்சர் ராஜேஷ்குமாரோ `ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லையென்றால் அமைச்சரவையைவிட்டு வெளியேறுவோம்’ என்றார்.
வார்த்தை மோதல்களைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதல்வர் விஜய்யைச் சந்தித்துப் பேசி, இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முனைந்தார் மாணிக்கம் தாகூர். அதன் பிறகும் த.வெ.க-வினர் ‘விஜய் பிரதமர்’ முழக்கத்தை நிறுத்தவில்லை. எனவே த.வெ.க-வுடன் இணக்கமாகச் செல்வதில் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன” என்றனர்.
நம்மிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்கள், “த.வெ.க-வுடன் இணைந்து பயணிப்போம்’ என்ற கூட்டணி நிலைப்பாட்டை ஆகஸ்ட் 17-ம் தேதி எடுத்தார் திருமா. மே 9 முதல் ஆகஸ்ட் 17 வரை கூட்டணி முடிவை அறிவிக்காமல் வைத்தற்குப் பின்னணியில் எங்களுக்கு மிகப்பெரிய தயக்கம் இருந்தன. கூட்டணியில் இணைந்த பிறகும் அதீத குழப்பங்கள் இருக்கின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தின் எதிர்காலத் திட்டம் என்னவென்றே எங்களால் கணிக்க முடியவில்லை, தேர்தல் முடிந்த மறுதினமே பனையூருக்கு ஓடிப்போய் ஆதரவளித்தது காங்கிரஸ் கட்சி. ஆனாலும் பா.ஜ.க-வை வீழ்த்த அணிசேர்ந்திருக்கும் `இந்தியா’ கூட்டணிக்குள் வரத் தயங்குகிறது த.வெ.க.
விஜய் முதல்வரான பிறகு, பா.ஜ.க-வை ‘பாசிச சக்தி’ எனச் சொல்லக்கூடத் தயங்குகிறார். நீட் எதிர்ப்பு போராட்டங்களை காவல்துறை மூலம் ஒடுக்கியது, காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட மறுத்து கர்நாடகா முதல்வரைச் சந்திக்க முயன்றது என முதிர்ச்சியற்ற அரசியலையே வெளிப்படுத்தினார். `இடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்கக் கூடாது’ என அறிவிப்பு செய்துவிட்டு, எதிர்ப்பு கிளம்பியதும் திரும்பப் பெறுகிறார்கள். அதேபோல், ஆணவக் கொலை தடுப்புச் சட்டம், இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை, சாதிய வன்முறைகளின் நியாய நடவடிக்கை என எதிலுமே த.வெ.க-வுக்கு அழுத்தமான நிலைப்பாடுகள் இல்லை.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில், பிரதமர் மோடி, அமித் ஷாவைச் சட்டமன்றத்தில் சாடினார் எங்கள் அமைச்சர் வன்னி அரசு, அதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கச் சொல்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. அதேநேரம், ‘பா.ஜ.க-வுக்கு அடிபணிந்து கிடக்கும் அ.தி.மு.க-வை, இவ்வளவு தைரியமாக த.வெ.க உடைத்து
எம்.எல்.ஏ-க்களை இழுக்கிறது என்றால், பா.ஜ.க-வின் கிரீன் சிக்னல் இல்லாமல் அதைச் செய்ய முடியுமா?’ என்ற சந்தேகமும் எங்களுக்குத் தீரவில்லை. த.வெ.க இடைத்தேர்தலுக்கு ஆயத்தமாவதைப் பார்த்தால் மெஜாரிட்டி கிடைத்துவிட்டால் எங்கள் கதி என்ன என யோசிக்கத் தோன்றுகிறது” என்றனர்.
நம்மிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள், “திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டாட்சியர், கம்யூனிஸ்ட் இயக்கங்களைச் சேர்ந்த இளைஞர்கள், மாணவர்களின் பட்டியலை முழு விவரங்களுடன் எடுத்துத்தரச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார். தமிழக உயர் கல்வித்துறை சார்பில், ‘கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும்’ எனச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படிச் செய்வதற்கு, கம்யூனிஸ்ட் கட்சி என்ன தடை செய்யப்பட்ட இயக்கமா... இது குறித்து சட்டமன்றத்தில் பதிலளித்த உயர் கல்வித்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பினால், ‘எனக்கு எதுவும் தெரியாது’ என்கிறார். ஆக, அமைச்சருக்கே தெரியாமல் அதிகாரிகள் செயல்பட்டுவருவதை அமைச்சரே ஒப்புக்கொள்கிறார். அப்படி யென்றால், நடப்பது அதிகார வர்க்க ஆட்சிதானே.... இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்த பிறகும் த.வெ.க அரசு அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
2024 நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க-வை வீழ்த்துவதுதான் ஒற்றை நோக்கம் எனப் பிரதமர் வேட்பாளரையே முன்னிறுத்தாமல் `இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் தேர்தலைச் சந்தித்தன. அதன் விளைவாகவே, பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணிக் கட்சிகளை நம்பி நிற்கும் நிலைக்கு பா.ஜ.க தள்ளப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில், `இந்தியா’ கூட்டணி முழு ஒற்றுமையுடன் செயல்பட்டு, பா.ஜ.க-வை ஆட்சியிலிருந்து அகற்ற உற்ற துணையாக இருக்க வேண்டும்.
அப்படியில்லாமல், `முதல்வர் விஜய்தான் பிரதமர்’ எனக் கூறி, த.வெ.க ஆட்சிக்கு ஆதரவளித்து வரும் காங்கிரஸ் கட்சியைச் சீண்டிப் பார்ப்பது தேவையற்ற குழப்பத்தையே விளைவிக்கும். எனவே, கூட்டணிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் த.வெ.க-வினர் பேசுவதை முதல்வர் தடுக்க வேண்டும்” என்றனர்.
நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள் “த.வெ.க-வின் நிர்வாகரீதியான செயல்பாடுகள் எப்படியிருந்தாலும் அதைச் சரிசெய்ய கால அவகாசம் கொடுக்கலாம். ஆனால் கொள்கைரீதியாகவே த.வெ.க தடுமாறி வருவது தோழமைக் கட்சிகளுக்குக் கசப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. ‘பா.ஜ.க-வை விமர்சிக்க மறுக்கும் த.வெ.க., காங்கிரஸைச் சீண்டுகிறது என்றால் த.வெ.க-வின் நோக்கம் என்ன?’ எனக் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் த.வெ.க ஆட்சியைக் கவிழ்க்க வழி பார்க்கும் நேரத்தில் கூட்டணிக் கட்சி களைக் குமுறலில் விடுவது த.வெ.க அரசுக்குப் பாதுகாப்பானது அல்ல” என்றனர்.
என்ன செய்யப்போகிறார் முதல்வர் விஜய்?