📅 Sunday, 06 September 2026 IST | ஆவணி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 04, 2026 08:01 AM

“என் உலக சாதனையை முறியடித்தாய்”.. ஸ்மிருதி மந்தனா பற்றி ஜாம்பவான் மிதாலி ராஜ் நெகிழ்ச்சி பதிவு

“என் உலக சாதனையை முறியடித்தாய்”.. ஸ்மிருதி மந்தனா பற்றி ஜாம்பவான் மிதாலி ராஜ் நெகிழ்ச்சி பதிவு

“என் உலக சாதனையை முறியடித்தாய்”.. ஸ்மிருதி மந்தனா பற்றி ஜாம்பவான் மிதாலி ராஜ் நெகிழ்ச்சி பதிவு

துபாய்: சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்தவர் என்ற தனது சாதனையை முறியடித்த ஸ்மிருதி மந்தனாவுக்கு, இந்திய முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் நெகிழ்ச்சியுடன் பாராட்டு தெரிவித்துள்ளார். 2026 மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 124 ரன்கள் விளாசினார்.

இந்தப் போட்டியின் 17வது ஓவரில் சதம் அடித்த ஸ்மிருதி மந்தனா, சர்வதேச கிரிக்கெட்டில் தனது 18வது சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய ஜாம்பவான் மெக் லானிங் தன் வசம் வைத்திருந்த சாதனையை இவர் முறியடித்தார்.

அடுத்த 18வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பிரம்மாண்ட சிக்சர்களை பறக்கவிட்ட மந்தனா, மிதாலி ராஜ் வசமிருந்த 10,868 ரன்கள் என்ற உலக சாதனையை தகர்த்தார். இதன் மூலம் சர்வதேச மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்து புதிய வரலாறு படைத்தார். மந்தனாவை கட்டுப்படுத்த ஹாங்காங் அணி வைட் லைனில் பந்துவீசிய போதிலும், நேர்த்தியான ஷாட்டுகள் மூலம் மைதானத்தின் நாலாபுறமும் அவர் பந்துகளை விரட்டினார்.

இந்தச் சாதனையை பாராட்டி மிதாலி ராஜ் வெளியிட்ட பதிவில், "இந்த சாதனைக்கு நீங்கள் முழு தகுதியானவர். ஒரு இளம் வீராங்கனையாக கிரிக்கெட்டில் நுழைந்து, இன்று இந்தியா உருவாக்கிய மிகச்சிறந்த பேட்டர்களில் ஒருவராக நீங்கள் வளர்ந்து நிற்பதை நான் நேரில் பார்த்துள்ளேன். எனது உலக சாதனையை முறியடித்து, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த வீராங்கனையாக மாறியிருப்பது எனக்கு உண்மையாகவே பெருமை அளிக்கும் தருணம்," என மனதார பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து பேசிய மந்தனா, "எனக்கு இந்த சாதனைகள் நிகழ்ந்தது பற்றி களத்தில் முன்கூட்டியே தெரியாது. மெதுவாக பந்துவீசும் பவுலர்களை எதிர்கொள்வது எனக்கு கடினம். ஆனால் ஹாங்காங் பவுலர்கள் பவர்பிளே ஓவர்களில் மிகவும் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். அவர்களின் ஆற்றலை பார்த்து நாம் பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறினார். உலக சாதனைகளை வாரிக்குவித்து வரும் மந்தனாவுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டு மழையை பொழிந்து வருகின்றனர்.

இந்தப் போட்டியில் இந்திய அணி 193 ரன்கள் குவித்தது. ஹாங்காங் அணி 56 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதை அடுத்து இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. 2026 மகளிர் ஆசிய கோப்பை நாக் அவுட் சுற்றுக்கும் தகுதி பெற்றது.