📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 24, 2026 10:05 AM

சிங்கப்பூரில் லஞ்சம் கொடுத்த பெண்ணுக்கு சிறைத்தண்டனை

சிங்கப்பூரில் லஞ்சம் கொடுத்த பெண்ணுக்கு சிறைத்தண்டனை

செயின்ட் ஜோசப் கல்விக் கழகத்தின் முன்னாள் நிர்வாகிக்கு லஞ்சம் கொடுத்த பெண்ணுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கட்டட அலங்கார நிறுவனம் ஒன்றின் விற்பனை நிர்வாகியான 54 வயது ரெனீ சோங் முய் குவான் என்பவருக்கு மூன்று மாதங்கள், இரண்டு வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் தன்மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளையும் அந்தப் பெண் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

கல்விக் கழகத்தின் முன்னாள் வசதி நிர்வாகியான இங் செர் ஹிம் என்பவருக்கு 52,000 வெள்ளிக்கும் அதிகமான தொகையை ரெனீ லஞ்சமாகக் கொடுத்துள்ளார்.

தனது நிறுவனத்திற்குப் பள்ளியின் ஒப்பந்தங்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதிசெய்ய ரெனீ அத்தகைய குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார்.

பள்ளிக்குச் சமர்ப்பிக்கப்படும் விலைப்புள்ளிகளை உயர்த்தித் தருமாறு விற்பனையாளர்களிடம் கூறி, அந்தக் கூடுதல் தொகையைத் தனக்குக் கொடுக்கும்படி இங் செய்வார்.

லஞ்சம் கொடுக்க மறுத்தால் தனது நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கிடைக்காமல் போகலாம் என்ற அச்சத்தில் ரெனீ அந்த ஏற்பாட்டிற்குச் சம்மதித்துள்ளார்.

அதன்படி 2019 ஜனவரி முதல் 2022 செப்டம்பர் வரை அவர் பலமுறை பல்லாயிரக்கணக்கான வெள்ளியை லஞ்சமாகக் கொடுத்துள்ளார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

இந்த ஊழல் செயல் நியாயமான வர்த்தகப் போட்டியைப் பாதித்ததாகவும் மற்ற தகுதியான நிறுவனங்களுக்குக் கிடைக்க வேண்டிய தொழில் வாய்ப்புகளைப் பறித்துவிட்டதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

இங் மீதான குற்றங்கள் கடந்த ஆண்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் அவருக்கும் ஓராண்டுக்கு மேலான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.