📅 Friday, 09 October 2026 IST | புரட்டாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health October 09, 2026 08:04 AM

சிங்கப்பூரில் காற்றுத் தரம் மேலும் மோசமடைந்தது; பிஎஸ்ஐ 170ஐத் தொட்டது

சிங்கப்பூரில் காற்றுத் தரம் மேலும் மோசமடைந்தது; பிஎஸ்ஐ 170ஐத் தொட்டது

சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9), காற்றுத் தரம் மேலும் மோசமடைந்தது.

மத்திய வட்டாரத்தில் 24 மணி நேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு (பிஎஸ்ஐ) 170ஆகப் பதிவானது. இதுவே 2026ஆம் ஆண்டில் பதிவான ஆக அதிக அளவாகும். இதற்குமுன் செப்டம்பர் 29ஆம் தேதி, மத்திய வட்டாரத்தில் அக்குறியீடு 167ஆகப் பதிவானதே அதிகபட்ச அளவாக இருந்தது.

வெள்ளிக்கிழமை காலை 9 மணி நிலவரப்படி, தீவின் வடக்குப் பகுதிகளில் குறியீடு 115ஆகவும் தெற்கில் 150ஆகவும் கிழக்கில் 143ஆகவும் மேற்கில் 164ஆகவும் பதிவானது.

பிஎஸ்ஐ குறியீடு 101 முதல் 200 வரை இருந்தால் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியதாகக் கருதப்படும். சிங்கப்பூரின் அனைத்துப் பகுதிகளிலும் பிஎஸ்ஐ அளவு தொடர்ந்து ஆரோக்கியமற்ற நிலையிலேயே நீடித்து வருகிறது.

காலை 9 மணிக்கு பிஎம்2.5 அளவுகளும் சிங்கப்பூர் முழுவதும் உயர்ந்து காணப்பட்டன. உடனடியாகக் காற்றைத் தெரிந்துகொள்ள பிஎம்2.5 அளவு பயன்படுகிறது.

இந்தோனீசியாவின் சுமத்திரா, மேற்குக் கலிமந்தான் பகுதிகளிலிருந்து அடர்ந்த புகைமூட்டம் சிங்கப்பூரை நோக்கி நகர்வதாக தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது.

பிஎஸ்ஐ ஆரோக்கியமற்ற வரம்பில் இருக்கும்போது பொதுமக்கள் நீடித்த அல்லது கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். முதியோர், கர்ப்பிணிகள், குழந்தைகள், நாட்பட்ட நுரையீரல் அல்லது இதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் வெளிப்புறச் செயல்பாடுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.