சிங்கப்பூர்
சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே விரைவில் கூடுதல் விமானச் சேவைகள் இடம்பெற உள்ளன.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ), ஏர் இந்தியா என இரு நிறுவனங்களுக்கும் இடையிலான புதிய உத்திபூர்வ பங்காளித்துவத்தின்கீழ், சிங்கப்பூருக்கும் இந்தியாவின் எட்டு நகரங்களுக்கும் இடையே கூடுதல் விமானச் சேவைகளும் மேம்பட்ட வசதிகளும் இடம்பெறுகின்றன.
அக்டோபர் 15 முதல், பயணிகள் இரு நிறுவனங்களின் இணையத்தளங்கள், செயலிகள், அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் மூலம் மற்றொரு நிறுவனத்தின் விமானங்களை நேரடியாகப் பதிவு செய்யலாம் என்று புதன்கிழமை (அக்டோபர் 7) இரு நிறுவனங்களும் வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்தது.
முன்னதாக, ‘விமான எண் பகிர்வு’ (கோட்ஷேர்) அடிப்படையில் மற்றொரு நிறுவனத்தின் விமானத்தில் பயணிக்க, சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் இணைப்புச் சேவை கட்டாயமாக இருந்தது.
சிங்கப்பூருக்கும் சென்னை, அகமதாபாத், பெங்களூர், புதுடெல்லி, ஹைதராபாத், கொச்சி, கோல்கத்தா, மும்பை ஆகிய எட்டு இந்திய நகரங்களுக்கும் இடையே வாரந்தோறும் இயக்கப்படும் 126 விமானச் சேவைகள் இந்தப் புதிய வசதியின்கீழ் வருகின்றன.
ஜனவரி மாதம் இரு நிறுவனங்களுக்கும் இடையே கையெழுத்தான வணிக ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அத்துடன், வரும் 2027ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு முதல் ‘மகாராஜா கிளப்’, ‘கிரிஸ்ஃபிளையர்’ உறுப்பினர்களுக்குக் கூடுதல் சலுகைகள் வழங்கப்படும்.
இதன் மூலம் முன்னுரிமை பயணச் சோதனை, கூடுதல் பயணப்பெட்டிச் சலுகை, விமானத்தில் ஏறுவதற்கான முன்னுரிமை ஆகியவை தகுதியுள்ள உறுப்பினர்களுக்குக் கிடைக்கும்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விமானச் சேவையின் தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த பயண அனுபவத்தையும் கூடுதல் வசதிகளையும் வழங்க இந்தப் பங்காளித்துவம் உதவும் என இரு நிறுவனங்களின் வணிக முதன்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காத்திருப்பு நேரத்தைக் குறைப்பது உட்பட கூடுதல் வாடிக்கையாளர் நன்மைகளை அறிமுகப்படுத்த இரு நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
தற்போது ஏர் இந்தியாவும் சிங்கப்பூர் ஏர்லைன்சும் 27 நாடுகளில் உள்ள 77 இடங்களுக்கு விமான எண் பகிர்வு அடிப்படையில் இணைப்புச் சேவை விமானங்களை இயக்குகின்றன. இவ்விரு நிறுவனங்களும் 2024 அக்டோபரில் இச்சேவை தொடர்பான பங்காளித்துவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், 2024 நவம்பரில் ஏர் இந்தியா நிறுவனத்தின் 25.1 விழுக்காட்டுப் பங்குகளை வாங்கியது.