சிஎஸ்கே பயிற்சியாளராக பொறுப்பேற்பதை பெருமையாக கருதுகிறேன்.. ஜாகீர் கான் பெருமிதம்
சிஎஸ்கே பயிற்சியாளராக பொறுப்பேற்பதை பெருமையாக கருதுகிறேன்.. ஜாகீர் கான் பெருமிதம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்தியாவின் முன்னாள் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானை, 2027-ஆம் ஆண்டு புதிய தலைமை பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இந்திய அணி 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பையைக் கைப்பற்றியதில் முக்கியப் பங்கு வகித்தவர் ஜாகீர் கான்.
14 ஆண்டுகள் நீடித்த தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த அனுபவம் கொண்ட அவர், இந்தியாவுக்காக 92 டெஸ்ட், 200 ஒருநாள் மற்றும் 17 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், ஐபிஎல் தொடரில் 100 போட்டிகளில் விளையாடியுள்ள ஜாகீர் கான், தனது ஓய்வுக்குப் பிறகு பல்வேறு பயிற்சிப் பொறுப்புகளையும் திறம்பட கையாண்டுள்ளார்.
ஜாகீர் கானின் நியமனம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ரூபா குருநாத் வெளியிட்டுள்ள மகிழ்ச்சி செய்தியில், "ஜாகீர் கானை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக அறிவிப்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம். அவரது சிறந்த விளையாட்டு அனுபவமும், இளம் வீரர்களை வழிநடத்தும் திறனும் நமது அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அவரது வழிகாட்டுதல் இந்த அணியின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று நாங்கள் முழுமையாக நம்புகிறோம்" என்று குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக இயக்குநர் கே.எஸ். விஸ்வநாதன் "ஜாகீர் கான் ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர். பல ஆண்டுகளாக பல இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு, குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக விளங்கி வருகிறார். 2000-களின் தொடக்கத்தில் இந்திய அணியின் பல வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகளுக்கு வீரராக ஜாகீர் கானே முக்கியக் காரணமாக அமைந்தார்."
"கிரிக்கெட் விளையாட்டை மிக நுணுக்கமாகப் புரிந்து வைத்துள்ள சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரான அவரை எங்கள் சிஎஸ்கே குடும்பத்தில் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்" என்றார்.சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்பது குறித்து பேசிய ஜாகீர் கான், "ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சிஎஸ்கே-வில் இணைவது எனக்குக் கிடைத்த பெருமையாகும்."
"ஒரு வீரராக களத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராகப் போட்டியிட்ட தருணங்களை நான் எப்போதும் ரசித்துள்ளேன். சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் உருவாக்கும் அற்புதமான சூழல் இந்த அணிக்கு மேலும் தனித்துவமான சிறப்பைச் சேர்க்கிறது. இத்தகைய நீண்ட பாரம்பரியமிக்க அணியுடன் இணைந்து செயல்பட நான் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்தார்.