📅 Tuesday, 06 October 2026 IST | புரட்டாசி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 06, 2026 03:03 AM

சென்னையில் 2023ல் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட நடிகர் சரண் கார் ஏற்றி கொல்லப்பட்டது அம்பலம்

சென்னையில் 2023ல் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட நடிகர் சரண் கார் ஏற்றி கொல்லப்பட்டது அம்பலம்

சென்னையில் 2023ல் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட நடிகர் சரண் கார் ஏற்றி கொல்லப்பட்டது அம்பலம்

சென்னை: சென்னையில் 2023ல் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட நடிகர் சரண் கார் ஏற்றி கொல்லப்பட்டது அம்பலமானது.

கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதி, இயக்குநர் வெற்றிமாறன் படத்தில் நடித்த சரண்ராஜ் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கிண்டி போக்குவரத்துப் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்ட விசாரணையில், இது விபத்தினால் ஏற்பட்ட மரணம் என்றே கூறப்பட்டது. ஆனால், அவரது தாயார் மாரியம்மாள், இது விபத்து அல்ல; திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என்பதை நிரூபிக்கும் வகையில் சிசிடிவி (CCTV) ஆதாரங்களுடன் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சென்னை நீதிமன்றம் இதன் இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது. இது விபத்து அல்ல, திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என்பது சிசிடிவி (CCTV) ஆதாரங்கள் மூலம் உறுதியாகியுள்ளது. மேலும், அப்போது பணியில் இருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் அகிலா, குற்றவாளிகளைத் தப்பிக்க வைப்பதற்காகத் தவறான தகவல்களைக் கொடுத்து, அதன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கையையும் (FIR) குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளார் என்று நீதிமன்றம் தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

எனவே, இந்த வழக்கைப் பொறுத்தவரையில் நேர்மையான அதிகாரியைக் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். நடிகர் சரண் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 60 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று தமிழக டிஜிபி-க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும், முறையாக விசாரிக்காத காவல் ஆய்வாளர் அகிலா மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு விசாரணை நடத்துகின்ற எந்தப் பதவியும் அவருக்கு வழங்கப்படக் கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

விருகம்பாக்கத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த வாகனம் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாகவே முதல் தகவல் அறிக்கையும் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், சிசிடிவி காட்சிகளைப் பார்க்கும்போது, இறந்த சரணை அழைத்து வந்த அவரது நண்பர்களின் காரே வேகமாக மோதி இந்த விபத்தை ஏற்படுத்தியது உறுதியானது.

குறிப்பாக, அந்த காரில் பயணித்தவரும், நடிகர் சரணுடன் வேலை பார்த்தவருமான கலை இயக்குனர் (ஆர்ட் டைரக்டர்) இந்த கொலையைச் செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. சரணின் நண்பர்கள், அவரது மனைவியின் நகைகளை விற்று பல லட்சம் ரூபாய் வாங்கியுள்ளனர். அந்தப் பணத்தைத் திருப்பித் தருமாறு சரண் தொடர்ந்து கேட்டு வந்ததால், அவர் மீது காரை ஏற்றிப் படுகொலை செய்துவிட்டு, அதனை விபத்தாக மாற்றியுள்ளனர். இதற்கு உடந்தையாகக் காவல் ஆய்வாளரும் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சரண்ராஜின் தாய் மாரியம்மாள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில், தற்போது நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது.