அயோத்தி ராமர் கோவில் நன்கொடை விவகாரம்; நடைமுறைகளில் விதிகளை மீறியது விசாரணையில் அம்பலம்
லக்னோ: 'அயோத்தி ராமர் கோவில் நன்கொடை விவகாரத்தில், பணம் எண்ணும் இடத்தில் பாதுகாப்பு இல்லாதது உட்பட செயல்பாட்டு நடைமுறைகளில் பல விதிமீறல்கள் நடந்துள்ளன' என, சிறப்பு விசாரணைக் குழு அறிக்கை வாயிலாக தெரியவந்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள பிரமாண்ட ராமர் கோவிலை, ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. இந்த கோவிலுக்கு, உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான நன்கொடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அவ்வாறு பெறப்பட்ட நன்கொடையில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. மொத்தம் 27 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதை, சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்த முறைகேடு தொடர்பாக அறக்கட்டளையின் முன்னாள் பொதுச் செயலர் சம்பத் ராயின் டிரைவர் உட்பட எட்டு பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், நன்கொடை விவகாரத்தில் செயல்பாட்டு நடைமுறைகளில் விதிமீறல்கள் நடந்துள்ளது விசாரணைக் குழு தாக்கல் செய்த அறிக்கை வாயிலாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதன் விபரம்:
நன்கொடை எண்ணும் பணியாளர்கள் பாக்கெட்டுகள் இல்லாத ஆடைகள் அணிய வேண்டும், 'சைனிக் செக்யூரிட்டி சர்வீசஸ்' நிறுவனம் வாயிலாக காவலர் ஒருவரை நியமிக்க வேண்டும். நன்கொடை எண்ணும் அறைக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து பணியாளர்களையும் தொடர்ந்து சோதனை செய்ய வேண்டும்.
அங்கு, அவ்வப்போது திடீர் சோதனைகள் நடத்தப்பட வேண்டும் ஆகியவை அறக்கட்டளையால் உருவாக்கப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறைகளில் கூறப்பட்டுள்ள விதிகள்.
ஆனால், இந்த விதிகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. பணத்தை எண்ணும் போது பாதுகாப்பு காவலரை பணியமர்த்துதல், பணியாளர்களை சோதனை செய்தல் மற்றும் நன்கொடை எண்ணும் செயல்முறையின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை 180 நாட்களுக்கு பாதுகாத்து வைத்திருத்தல் போன்ற நடைமுறைகள் மீறப்பட்டுள்ளன.
பொதுச் செயலராக இருந்த சம்பத் ராயின் ஓட்டுநர் ராமசங்கர் யாதவிடம், விதிகளை மீறி கோவிலில் உள்ள பல உண்டியல்களின் சாவிகள் இருந்தன. நன்கொடையில் முறைகேடு நடந்ததற்கு இது முக்கிய காரணம்.
அதேபோல், நன்கொடை எண்ணும் பணியில், தின்னு யாதவ் தன் உறவினரான மணீஷ் குமார் யாதவை நியமித்துள்ளார். இருவரும் சேர்ந்து இந்த முறைகேட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நன்கொடை முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட எட்டு பேரில், ஆறு பேரிடம் இருந்து, 80 லட்சம் ரூபாய் ரொக்கமும், சில வெளிநாட்டு நாணயங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
நன்கொடை முறைகேடு குறித்து காங்கிரசின் பவன் கெரா கூறியதாவது: அயோத்தி ராமர் கோவில் தொடர்பான திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்தே, அது ஆர்.எஸ்.எஸ்.,ன் மேற்பார்வையிலும், பிரதமர் அலுவலகத்தின் நேரடி கண்காணிப்பிலும் இருந்து வருகிறது. நிருபேந்திர மிஸ்ரா, முன்னாள் ஆர்.எஸ்.எஸ்., பேச்சாளர் சம்பத் ராய் போன்ற பிரதமர் மோடிக்கு நெருக்கமான நபர்களை கொண்டு இந்த அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. இப்போது, அங்கு நிதி முறைகேடுகள் குறித்து புகார் எழுந்துள்ளது. நன்கொடையாக பெறப்படும் பணம் எங்கே செல்கிறது? இதில் யார் யார் எல்லாம் ஈடுபட்டுள்ளனர்? டில்லி மற்றும் நாக்பூர் வரை இதன் தொடர்பு என்ன? போன்ற கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டியது அவசியம். ஹிந்து நம்பிக்கையை நாங்கள் புண்படுத்தவில்லை; நன்கொடை திருட்டில் ஈடுபட்டவர்கள்தான் அதை செய்கிறார்கள். திருட்டு குறித்து கேள்வி எழுப்புவது நம்பிக்கையின் மீதான தாக்குதல் அல்ல. திருட்டில் ஈடுபட்டவர்கள் நம்பிக்கையை ஒரு கேடயமாக பயன்படுத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.