அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: தேர்தல் ஆணையம் புதிய விதிகளை உருவாக்க வேண்டும்: பெ. சண்முகம்!
அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: தேர்தல் ஆணையம் புதிய விதிகளை உருவாக்க வேண்டும்: பெ. சண்முகம்!
சென்னை: ஏற்கனவே நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள், 20 நாட்களுக்குள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதே வேட்பாளர்கள் வேறொரு கட்சியின் சார்பில் போட்டியிடுவதை சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் இந்த அணுகுமுறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் வரவேற்பதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், தேர்தல் ஆணையம் ஏற்கனவே தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுவிட்ட நிலையில், அதை நிறுத்துவதற்கு வழியில்லை என்ற வகையிலேயே உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.
அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) சேர்ந்தபோதே, இது வாக்களித்த மக்களுக்குச் செய்யும் துரோகம் என்று தாங்கள் கடுமையாக விமர்சித்ததாகவும், தற்போது அதையே உயர்நீதிமன்றமும் தனது கருத்தின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் பெ. சண்முகம் தெரிவித்தார்.
இதுபோன்று ஒரு தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்ற பின்னர் 10 அல்லது 20 நாட்களுக்குள் பதவியை ராஜினாமா செய்து, மீண்டும் தேர்தல் நடைபெறும்போது வேறொரு கட்சியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், தேர்தல் ஆணையம் உரிய புதிய விதிகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இல்லையெனில், இது இயற்கையாக ஏற்பட்ட இடைத்தேர்தல் அல்ல; மக்கள்மீது திணிக்கப்பட்ட தேர்தலாகவே பார்க்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார். இந்தத் தேர்தல் திணிக்கப்படுவதற்கு மரகதம் குமாரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய இருவரும்தான் முக்கியக் காரணம் என்றும் பெ. சண்முகம் குற்றம்சாட்டினார்.
மேலும், உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகளையும் வாக்காளர்கள் கவனத்தில் கொண்டு, இந்த இரு வேட்பாளர்களையும் முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்று வாக்காளர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
“என்ன ஆதாயத்தைக் கருத்தில் கொண்டு அவர்கள் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் சேர்ந்தார்கள் என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது. எந்தவித ஆதாயமும் இல்லாமல் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்வது என்பது சாதாரணமாக நடைபெறக்கூடிய காரியம் அல்ல.
அப்படியிருக்க, என்ன ஆதாயத்தைக் கருத்தில் கொண்டு அவர்கள் ராஜினாமா செய்தார்கள்? ராஜினாமா செய்வதற்காக தவெக தரப்பில் என்ன வாக்குறுதி அளிக்கப்பட்டது? இதுகுறித்து இதுவரை அவர்கள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
அவ்வாறு எந்தக் காரணமும் தெரிவிக்கப்படவில்லை என்றால், ஏதோ ஒரு நோக்கத்துடனும், ஏதோ ஒன்றை எதிர்பார்த்தும் அவர்கள் ராஜினாமா செய்திருக்கலாம் என்ற கேள்வி எழுகிறது. அதைத்தான் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்” என்று பெ. சண்முகம் தெரிவித்தார்.