அப்பாவுக்கு இதுதான் நடந்தது.. என்னை பார்த்துக்கொள்ளுங்கள்.. தேவா மகன் ஸ்ரீகாந்த் தேவா உருக்கம்
சென்னை: இசையமைப்பாளர் தேவா மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் சூர்யா மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இன்னும் பல வருடங்கள் இருப்பார் என்று எதிர்பார்த்த நேரத்தில்; தேவா இப்படி திடீரென மறைந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவரது ரசிகர்கள் திணறுகிறார்கள். இந்நிலையில் ஸ்ரீகாந்த் தேவா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
தேனிசை தென்றல் தேவாவுக்கு பெரிய உடல்நல பிரச்னைகள் இருந்தது மாதிரி தெரியவில்லை. சூழல் இப்படி இருக்க நேற்று முன்தினம் அவர் தன்னுடைய வீட்டில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அருகே இருக்கும் மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்து சென்றார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. முதலமைச்சர், நடிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
ஸ்ரீகாந்த் தேவா செய்தியாளர் சந்திப்பு: அதனையடுத்து ஆற்காடு மாவட்டம் சக்கரமல்லூரில் தேவாவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி சடங்குகளை முடித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீகாந்த் தேவா, "தந்தை என்ற உறவு கடவுள் கொடுத்த பரிசு. திடீரென என் அப்பா இறந்துவிட்டார். அக்டோபர் 17ஆம் தேதி காலையில் வீட்டில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தோம். ஆனால் காப்பாற்ற முடியவில்லை. அவர் டயட்டில் எல்லாம் இல்லை. நேரத்தில் சரியாக இருப்பார். காலை உணவை 9.30 மணிக்கும், மதிய உணவை 2 மணிக்கும், இரவு உணவை 8 மணிக்கும் எடுத்துக்கொள்வார். மாத்திரைகள் எல்லாம் சரியாக எடுத்துக்கொள்வார்.
அனைவருக்கும் நன்றி: ஆனால் அதையெல்லாம் மீறி அவர் உயிரிழந்துவிட்டார். அப்பா இல்லாத இந்த இரண்டு நாட்களுமே எனக்கு கஷ்டமாக இருக்கிறது. இனிமேல் அவர் இல்லாத காலங்களை எப்படி கடக்கப்போகிறேன் என தெரியவில்லை. அப்பாவுக்காக முதலமைச்சர் விஜய் நேரில் வந்து மரியாதை செலுத்தினார். அரசு மரியாதையும் கொடுத்திருந்தார். அவருக்கும், அமைச்சர்களுக்கும் நன்றி. ஸ்டாலின் ஐயா, உதயநிதி ஸ்டாலின், திருமாவளவன், ஈபிஎஸ் என அனைத்து கட்சியினருக்கும் நன்றிகள்.
மக்கள் கதறுகிறார்கள்: ரஜினி, கமல், பிரபுதேவா, பிரசாந்த் என எல்லோரும் வந்தார்கள். அப்பாவோடு வேலை செய்தவர்களுக்கு அப்பாவை பற்றி தெரியும். அவருடன் வேலை செய்யாதவர்கள்கூட அவரை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன் என்று வந்தார்கள். அதையெல்லாம் நான் வியந்து பார்க்கிறேன். தமிழ்நாட்டிலிருந்து நிறைய பேர் வந்தார்கள். வெளிநாடுகளிலிருந்தும் வந்தார்கள். மீடியா மக்களுக்கும் ரொம்ப நன்றி. சக்கரமல்லூரில் அடக்கம் செய்திருக்கிறோம். அந்த ஊர் மக்கள் எல்லாம் கதறுகிறார்கள்.
என்னையும் பார்த்துக்கொள்ளுங்கள்: அப்பாவை தமிழ்நாட்டு மக்கள் பயங்கரமாக கொண்டாடினார்கள்.அதேமாதிரி எனக்கும் அந்த ஆதரவு கொடுக்க வேண்டும். இனிமேல் தமிழ்நாட்டு மக்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். சொந்த ஊரில் அப்பாவுக்கு மணிமண்டபம் கட்டவிருக்கிறோம். அப்பாவை அடக்கம் செய்ய அழைத்து செல்லும்போது காவல்துறையும் பெரிய உதவி செய்தது. அப்பா மாதிரி வர முடியாது. ஒரே சூரியன், ஒரே சந்திரன்தான். இப்போதுதான் அந்த வெறி வருகிறது. மீடியா மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.