ராகுல் டிராவிட் மகன் அன்வே அதிரடி வீண்.. யூத் ஒருநாள் போட்டியில் இலங்கையிடம் இந்தியா தோல்வி
ராகுல் டிராவிட் மகன் அன்வே அதிரடி வீண்.. யூத் ஒருநாள் போட்டியில் இலங்கையிடம் இந்தியா தோல்வி
கொழும்பு: இலங்கை அண்டர்-19 அணிக்கு எதிரான இரண்டாவது யூத் ஒருநாள் போட்டியில் இந்திய அண்டர்-19 அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும், ஜாம்பவான் ராகுல் டிராவிட்டின் மகன் அன்வே டிராவிட் அதிரடியாக விளையாடி 87 ரன்கள் குவித்த போதிலும் இந்திய அணியால் வெற்றியை எட்ட முடியவில்லை.
திங்கட்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அண்டர்-19 அணி, 19 ஓவர்களில் 81 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அப்போது ஜோடி சேர்ந்த அன்வே டிராவிட் மற்றும் அர்ஜுன் ராஜ்புத் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 145 ரன்கள் சேர்த்து அணியை மீட்டெடுத்தனர்.
அன்வே டிராவிட் 47 பந்துகளில் தனது முதல் யூத் ஒருநாள் அரைசதத்தைக் கடந்தார். அவர் 67 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அர்ஜுன் ராஜ்புத் 76 ரன்கள் குவித்தார். இறுதியில் இந்தியா 47.2 ஓவர்களில் 285 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இலங்கை தரப்பில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் கிம்ஹான் மெண்டிஸ் 41 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து 286 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அண்டர்-19 அணி, 48 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 291 ரன்கள் எடுத்து இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க வீரர் திமந்தா மஹாவிதனா 153 பந்துகளில் 155 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றியை உறுதி செய்தார். மஹாவிதனா இரண்டு முக்கிய பார்ட்னர்ஷிப்களை அமைத்தார். 2-வது விக்கெட்டுக்கு செனுஜா வெகுனகொடவுடன் (60 ரன்கள்) இணைந்து 103 ரன்களும், 3-வது விக்கெட்டுக்கு கேப்டன் விமத் தின்சராவுடன் (56* ரன்கள்) இணைந்து 163 ரன்களும் குவித்து இலங்கை அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.
முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்றிருந்த நிலையில், தற்போது 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது.