Anbil Avan Review: அன்பில் அவன் விமர்சனம்.. அசோக் செல்வன் எடுத்த ரிஸ்க்குக்கு படம் வொர்த்தா? இல்லையா?
சென்னை: ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் தயாரித்து நடித்துள்ள படம் தான் அன்பில் அவன். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். கமர்ஷியல் படங்களை கடந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் அசோக் செல்வன். அன்பில் அவன் படமும் ஒரு வித்தியாசமான கதை தான்.
மனைவியின் கனவுகளையும் ஆசைகளையும் நிறைவேற்ற ஒன்றுமே இல்லை என்றாலும் ஒரு கணவன் என்னவெல்லாம் செய்வான் என்கிற ஒன்லைனை வைத்துக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் தான் அன்பில் அவன்.
இந்த படத்துக்காக மலையில் ஏறி 70 அடி உயரத்தில் நீருக்குள் குதிக்கும் ஒரு ஜம்ப் காட்சி படமாக்கப்பட்ட நிலையில், அதே புரமோஷனாகவும் படக்குழு செய்தனர். அவ்வளவு ரிஸ்க் எடுத்து அசோக் செல்வன் நடித்த 'அன்பில் அவன்' எந்தளவுக்கு வொர்த் என்பது குறித்த விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
அன்பில் அவன் கதை: பணக்கார பெண்ணான இயல் (ப்ரீத்தி முகுந்தன்) தனது கல்லூரியில் பயமறியாமல் கலர் அடித்த தலையுடன் இருக்கும் ரக்ட் பாயான சூர்யாவை (அசோக் செல்வன்) காதலிக்கிறார். இருவரும் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துக் கொள்கின்றனர். இயலின் லட்சியமே ஒரு ஹில் ஸ்டேஷனில் ஹோம் ஸ்டே ஆரம்பித்து சம்பாதிக்க வேண்டும் என்பது தான். அதற்காக திருமணம் ஆன பிறகு ரியாலிட்டியில் ரொம்பவே கஷ்டப்பட்டு ஒரு ஹோட்டலில் இருவரும் ஏகப்பட்ட திட்டுகளை வாங்கி, தங்களுக்கான வாழ்க்கையை வாழ முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.
சில வருடங்களில் தனது மனைவி ஆசைப்பட்டத்தை நிறைவேற்றுவேன் என காதலிக்கும் போது வாக்கு கொடுத்த ஹீரோ ஒரு ஹில் ஸ்டேஷனில் ராணி பத்மினியின் (ரேவதி) பங்களாவை போராடி வாங்குகிறார். அந்த வீட்டை அங்கே உள்ள எம்.எல்.ஏ. ராஜநாயகம் அபகரிக்க திட்டமிட தனது மனைவியின் கனவை நிறைவேற்ற 'அன்பில் அவன்' ஆன கணவர் சூர்யா என்னவெல்லாம் செய்தார் என்பது தான் இந்த படத்தின் கதை.
படம் எப்படி இருக்கு?: கல்லூரி காலத்தில் எந்தவொரு கவலையும் இல்லாமல் யாருக்கும் அஞ்சாமல் இருக்கும் ஹீரோ திருமணத்துக்குப் பிறகு ரியாலிட்டி வாழ்க்கையில் ஒரு அலுவலகத்தில் வேலை செய்யும் போது எப்படியெல்லாம் கஷ்டம் வரும், தன்னுடைய கோபத்தை எப்படியெல்லாம் கட்டுப்படுத்த வேண்டும் என்பதை அறிந்து அசோக் செல்வன் சூர்யா கந்தசாமி கதாபாத்திரத்தில் கச்சிதமாகவே நடித்துள்ளார்.
அவருக்கு இணையாக நடிகை ப்ரீத்தி முகுந்தன் பணக்கார வீட்டுப் பெண் காதலுக்காக வீட்டை விட்டு வந்த நிலையில், கணவருடன் சேர்ந்து கஷ்டப்படுவதும், கணவர் தனக்காக தனது கனவை நிறைவேற்ற போராடுவதை பார்த்து "என்ன உனக்கு அவ்வளவு பிடிக்குமா சூர்யா" என கேட்கும் இடங்களில் எல்லாம் நடிப்பில் அசத்துகிறார்.
தெரியாத ஊருக்குச் சென்று புதிதாக ஒரு தொழில் தொடங்க நினைத்தால் அங்கே போலீஸ், அரசியல்வாதி என ஏகப்பட்ட தொல்லைகள் எப்படியெல்லாம் வரும், அவர்களை சமாளிக்க முடியாமல் திணறுவதும், ஒரு கட்டத்தில் திருப்பி அடிப்பது என படம் ஓடுகிறது. முதல் பாதியில் பெரிதாக எந்தவொரு சுவாரஸ்யமான காட்சிகளும் இல்லாமல் படம் நகர்கிறது. 2வது பாதி முழுவதும் தனது மனைவியை காப்பாற்ற ஹீரோ எதிரிகளுடன் சண்டைப் போட்டுக் கொண்டே இருப்பது திரையில் படத்தை பார்ப்பவர்களை பெரிதாக சுவாரஸ்யப்படுத்தவில்லை.
பிளஸ்: அசோக் செல்வன் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் தான் இந்த படத்தை உட்கார்ந்து பார்க்க வைக்க உதவுகின்றனர். இறுதி வரை இருவரது நடிப்பிலும் எந்தவொரு குறையுமில்லை. கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை, கெளதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரிய பலம். 70 அடி உயரத்தில் இருந்து குதித்த காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் முதல் பாதியில் பெரிய பாசிட்டிவாக உள்ளது. பீட்டர் ஹெயின் மாஸ்டரின் சண்டைக் காட்சிகள் கிளைமேக்ஸில் தத்ரூபமாக உள்ளது. இன்ஸ்பெக்டர் தவசியை ப்ரீத்தி முகுந்தன் அந்த இடத்திலேயே அடிக்கும் காட்சி ஹைலைட். லிப் லாக் அடிக்கும் காட்சியில் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் கெமிஸ்ட்ரி நல்லாவே ஒர்க்கவுட் ஆகியுள்ளது.
மைனஸ்: ஆனால், 2ம் பாதி முழுவதுமே ஹீரோ தனது வீட்டுக்கு வரும் நூற்றுக்கணக்கான ரவுடிகளை ஒரே ஆளாக அடித்து வீழ்த்துவது, ஏகப்பட்ட இடங்களில் கத்திக் குத்து வாங்கியும், மனைவி கத்திக் குத்து வாங்கி மூர்ச்சையாகி போன பின்னரும், அப்படியே அவரை மடியில் வைத்து உட்கார்ந்து இருப்பது எல்லாம் எந்தவொரு லாஜிக்கும் இல்லாமல் இருக்கிறது. ரசிகர்களை எண்டர்டெயின் செய்யும் காட்சிகளும், வியக்க வைக்கும் ஸ்க்ரீன்பிளேவும் இல்லாமல் படம் டல்லடிக்கிறது.