அமைதித் திட்டத்தை டிரம்ப் நிராகரித்ததாகத் தகவல்; காத்திருக்கும் ஈரான்
கெய்ரோ (ஐநா சபை): ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கவும் மத்திய கிழக்குப் போருக்கு முடிவு கட்டவும் ஈரான் முன்வைத்துள்ள அமைதித் திட்டத்தை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நிராகரித்துவிட்டதாக வால்ஸ்ட்ரீட் ஜர்னல் தகவல் வெளியிட்டுள்ளதால் அமெரிக்காவின் அதிகாரபூர்வத் தகவலுக்காக ஈரான் காத்திருக்கிறது.
ஆனால் அமெரிக்காவிடமிருந்து எந்தத் தகவலும் இதுவரை வரவில்லை.
நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாட்டுப் பொதுச்சபைக் கூட்டத்தில் கத்தார் மூலமாக ஈரான் அமைதித் திட்டத்தை முன்வைத்தது.
இந்தத் திட்டம், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் ஏழு நாட்களுக்குள் வட்டாரத்தில் நடக்கும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் உதவும் என்று ஈரான் கூறியிருந்தது.
உலகின் மிகவும் முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 25ஆம் தேதி ஐநாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஈரானிய வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்சி, இந்த ஒப்பந்தத்தால் நீரிணையை மீண்டும் திறப்பதற்கும் வட்டாரப் போரை நிறுத்துவதற்கும் ஏழு நாள் காலக்கெடு தொடங்கும் என்று கூறினார்.
ஈரான் ஒருபோதும் அணுகுண்டை உருவாக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சூளுரைத்துள்ள நிலையில், ஈரானின் அமைதித் திட்டத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டாலும் தனது அணுசக்தித் திட்டத்தை ஈரான் விட்டுக் கொடுக்காது என்று ஈரானிய உயர் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்சிடம் கூறியுள்ளார்.
ஈரானின் அமைதித் திட்டத்தில் அனைத்து நிலைகளிலும் மோதல்களை நிறுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
இதற்கிடையே ஹோர்முஸ் நீரிணைக்கு டிரம்ப் நீரிணை என்று பெயரிடப்பட்ட வரைபடத்தை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
இம்மாதத்தின் தொடக்கத்தில் ஹோர்முஸ் நீரிணை தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதால் அதற்கு டிரம்ப் நீரிணை எனப் பெயர் வைக்க யோசனை கூறியிருந்தார்.