அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நவநீதம் பிள்ளைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நவநீதம் பிள்ளைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
சென்னை: அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நவநீதம் பிள்ளைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். "உலகெங்கிலும் மனித உரிமைகளுக்காகக் குரல்கொடுத்தவர் நவநீதம் பிள்ளை. மனித உரிமைக்காகவும் நீதிக்காகவும் ஆற்றும் பணி, வரும் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கட்டும்" என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; "2026-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள நவநீதம் பிள்ளைக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், குரலற்றவர்களின் உரிமைகளுக்காகவும் தமது வாழ்நாளையே அர்ப்பணித்த அவரது நெடிய பயணத்திற்குக் கிடைத்துள்ள அங்கீகாரம் இது!
2012-ஆம் ஆண்டு ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையில் அவரைச் சந்தித்து, ஈழத்தமிழர்களின் துயர்மிகுந்த வாழ்வையும், நீதிக்காகவும் கண்ணியமான வாழ்வுக்காகவும் அவர்கள் நடத்திவரும் போராட்டத்தையும் எடுத்துரைத்ததை இத்தருணத்தில் நெகிழ்வுடன் நினைவுகூர்கிறேன்.
நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் தொடங்கி, உலகெங்கிலும் மனித உரிமைகளுக்காகக் குரல்கொடுப்பது வரை, துணிச்சலும் கொள்கை உறுதியும் நிறைந்தது அவரது பயணம்!
மனித உரிமைகளுக்காகவும் நீதிக்காகவும் அவர் ஆற்றிவரும் பணி, வருங்காலத் தலைமுறைகளுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும்!" என பதிவிட்டுள்ளார்.