ஆப்கானிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷாபூர் சத்ரான் காலமானார்.. 38 வயதில் வந்த மோசமான நோய்!
ஆப்கானிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷாபூர் சத்ரான் காலமானார்.. 38 வயதில் வந்த மோசமான நோய்!
காபூல்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷாபூர் சத்ரான், அரிய வகை நோய் பாதிப்பு காரணமாகத் தனது 38 வயதில் காலமானார். இந்த அதிர்ச்சித் தகவல் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகக் கடுமையான உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஷாபூர் சத்ரான், புது டெல்லியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். நாளை (புதன்கிழமை) அவர் தனது 39-வது பிறந்தநாளைக் கொண்டாடவிருந்த நிலையில், இன்று அவரது மரணம் நிகழ்ந்துள்ளது. அவர் 'ஹீமோபாகோசைடிக் லிம்போஹிஸ்டியோசைட்டோசிஸ்' (HLH) என்ற அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். இது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை அளவுக்கு அதிகமாகச் செயல்பட வைத்து, முக்கிய உறுப்புகளைப் பாதிக்கும் ஒரு ஆபத்தான நோயாகும்.
கடந்த அக்டோபர் மாதம் முதல் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஷாபூரை, ஆப்கானிஸ்தான் மருத்துவர்களின் அறிவுரைப்படி கடந்த ஜனவரியில் டெல்லிக்குச் சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். அவருக்கு அவசரமாக இந்திய விசா கிடைக்க, ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் தனது கிரிக்கெட் தொடர்புகள் மூலமும், மிர்வாய்ஸ் அஷ்ரப் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மூலமும் உதவி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 6 அடி 2 அங்குல உயரமும், நீளமான முடியும் கொண்ட ஷாபூர் சத்ரான், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் அடித்தளத்தை அமைத்த முக்கிய வீரர்களில் ஒருவராவார். கடந்த 2009 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்காக 80 சர்வதேச போட்டிகளில் விளையாடி பல வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார்.
ஷாபூர் சத்ரானின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், "ஆப்கான் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கிய ஷாபூர் சத்ரானின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு" என்று ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. அவரது மறைவு கிரிக்கெட் உலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.