📅 Saturday, 05 September 2026 IST | ஆவணி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion August 07, 2026 05:33 PM

ஆடி கிருத்திகை; திருத்தணியில் காவடிகளுடன் 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்

ஆடி கிருத்திகை; திருத்தணியில் காவடிகளுடன் 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்

திருத்தணி; முருகன் கோவிலில், நேற்று நடந்த ஆடி கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பத்திருவிழாவில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், காவடிகளுடன் மலைக்கோவிலுக்கு வந்ததால், 6 மணி நேரம் பொது வழியில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

திருத்தணி முருகன் கோவிலில், ஆடி கிருத்திகை விழா, கடந்த 4ம் தேதி ஆடி அஸ்வினியுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் ஆடி பரணியும், நேற்று ஆடி கிருத்திகை விழா மற்றும் முதல் நாள் தெப்பத் திருவிழாவும் நடந்தது. தீபாராதனை ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு, அதிகாலை 4:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்க கிரீடம், தங்க வேல், பச்சை மாணிக்க மரகத கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. அதே நேரத்தில், காவடி மண்டபத்தில் உள்ள உற்சவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபா ராதனை நடந்தது.

மதியம் 11:00 மணிக்கு, திருப்பதி திருமலையில் இருந்து, கோவில் முதன்மை ஆணையர் எம்.ரவிசந்திரா, அறங்காவலர் குழு உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டி மற்றும் கோவில் தலைமை குருக்கள் ஆகியோர், ஆடி கிருத்திகையை முன்னிட்டு, 19வது முறையாக, திருத்தணி முருகன் மலைக் கோவிலுக்கு பட்டு வஸ்திரம் கொண்டு வந்தனர். அப்போது, கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி ஆகியோர் திருப்பதி தேவஸ்தான கோவில் அதிகாரி மற்றும் குருக்களை மலர் மாலை அணிவித்து வரவேற்றனர். சிறப்பு பூஜைகள் பின், உற்சவர் சண்முகர், மூலவர் முருகப்பெருமான் ஆகியோருக்கு பட்டு வஸ்திரத்தை அணிவித்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. ஆடி கிருத்திகை விழாவில், தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, இரண்டு லட்சம் பக்தர்கள் மலர் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி மற்றும் அன்னக் காவடிகள் எடுத்து வந்து வழிபட்டனர்.

மொத்தத்தில், நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று இரவு வரை, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மூலவரை தரிசித்தனர். மலைக்கோவிலில் அதிகளவில் பக்தர்கள் குவிந்ததால், பொது வழியில் மூலவரை தரிசிக்க, 6 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கோலாகலம் திருத்தணி மட்டுமின்றி, திருவாலங்காடு ஒன்றியம், பாகசாலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், கடம்பத்துார் கடம்பவன முருகன் கோவில், பொன்னேரி பாலசுப்ரமணிய சுவாமி, பெரும்பேடு முத்துகுமாரசுவாமி, குமரஞ்சேரி குமாரசுவாமி ஆகிய கோவில்களில் சிறப்பு அபிஷேக தீப ஆராதனைகள் நடந்தன. சிறுவாபுரி முருகன் உட்பட கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும், ஆடி கிருத்திகை விழா கோலாகலமாக நடந்தது.

மயிலாடுதுறை; வைத்தீஸ்வரன் கோவிலில் ஆடி கார்த்திகை ...

சாத்துார்: சாத்துார் இருக்கன் குடி மாரியம்மன் கோயில் ...

திருப்பரங்குன்றம்: உலக நன்மை, மாணவியர் படிப்பு சிறக்க ...

போடி: ஆடி வெள்ளியை முன்னிட்டு போடி எஸ்.எஸ்.புரம் ...

கிணத்துக்கடவு; மாமாங்கம் பத்ரகாளியம்மன் கோவிலில் ...

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் ...