ஆஸ்கர் விருது போட்டிக்கு இளையராஜா இசையமைத்த “அந்தோனி” படம் தேர்வு
இளையராஜாவின் இசையில் இலங்கை தமிழ்த்திரைப்படம் “அந்தோனி” யின் ஆஸ்கர் விருதுக்கான தேர்வு குழுவுக்கு இலங்கை சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.
இயக்குநர்கள் சுகிர்தன் கிறிஸ்துராஜா- ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகிய இருவரும் இணைந்து இயக்கியுள்ள படம்‘அந்தோனி’. இத்திரைப்படத்தில் 'கயல்' வின்சென்ட் , டி.ஜே பானு, நிழல்கள் ரவி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யாழ்ப்பாண கடற்புற வாழ்வியலை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தில், இலங்கை நடிகர்களான சுதர்சன் ரவீந்திரன், சவுமி நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். மூன்று மொழிகளில் உருவாகி அண்மையில் உலகமெங்கும் திரையரங்குகளில் இந்தப் படம் வெளியானது. இளையராஜாவின் இசை கவனம் ஈர்த்தது. திரையரங்குகளை தொடர்ந்து இந்தியாவில் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளங்களில் திரைப்படம் வெளியானது.
ஈழத்து தமிழ்த் திரைப்படம் - ஆஸ்கார் விருது போட்டிக்கு தேர்வு
இந்நிலையில் ‘அந்தோனி’ திரைப்படம் இன்று இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனம் மூலம் 2027ம் ஆண்டின் சிறந்த சர்வதேச திரைப்படப்பிரிவில் ஆஸ்கார் விருது விழாவிற்கான தேர்வுக்குழுவிற்கு அனுப்பியிருப்பதாக படக்குழு தெரிவித்திருக்கின்றனர்.
இது குறித்து அந்த படக்குழு கூறியதாவது, “வரலாற்றில் முதல் முறையாக இளையராஜாவின் இசையில் இலங்கை (ஈழத்து) தமிழ்த் திரைப்படமாக வந்த ‘அந்தோனி’ 2027ம் ஆண்டின் சிறந்த சர்வதேச திரைப்படப்பிரிவில் ஆஸ்கர் நோக்கி பயணப்படுகிறது. கயல் வின்சன்ட், டிஜே பானு, சுதர்சன் ரவீந்திரன், சௌமி முனசிங்க, நிழல்கள் ரவி, அருள்தாஸ் ஆகியோரின் நடிப்பிலும், சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகியோரின் இயக்கத்தில் மூன்று மொழிகளில் உருவாகி அண்மையில் உலகமெங்கும் வெளியான படம் இது” என்று தெரிவித்துள்ளதனர்.
இதன்மூலம் தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக இளையராஜாவின் இரண்டு படங்கள் ஆஸ்கர் போட்டிக்கு செல்வது சாதனையாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கமல்ஹாசன் - இளையராஜா கூட்டணியில் வெளியான தேவர் மகன், ஹே ராம் படங்கள் ஆஸ்கர் போட்டியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இளையராஜாவின் இசையில் மராத்தி திரைப்படம் தேர்வு
சந்தோஷ் தவாகர் இயக்கிய ‘கோந்தல்’ என்ற மராத்தி திரைப்படம், 2027 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டியில் பங்கேற்க இந்தியா சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.