ஆப்கானிஸ்தான் எதிரான டி20 தொடர்.. உடல்தகுதி தேர்வில் வென்ற இந்திய அணியின் அதிரடி வீரர்
ஆப்கானிஸ்தான் எதிரான டி20 தொடர்.. உடல்தகுதி தேர்வில் வென்ற இந்திய அணியின் அதிரடி வீரர்
டெல்லி: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கு முன்னதாக, இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி தனது உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதன் மூலம் டெல்லியில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் அவர் விளையாடுவது உறுதியாகியுள்ளது.
கடந்த ஜூன் 2026-ல் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய பிறகு, ஆந்திராவைச் சேர்ந்த நிதிஷ் ரெட்டி எந்தவொரு போட்டி கிரிக்கெட்டிலும் பங்கேற்கவில்லை. இதனால், ஆப்கானிஸ்தான் டி20 தொடருக்கான இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், அவரது உடற்தகுதிக்கு உட்பட்டே அவர் அணியில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அவருடன் வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோரின் உடற்தகுதியும் கண்காணிக்கப்பட்டு வந்தது. தற்போது பிசிசிஐ மருத்துவக் குழுவிடமிருந்து நிதிஷ் ரெட்டிக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, டெல்லியில் இருக்கும் இந்திய அணியினருடன் அவர் வியாழக்கிழமை இணைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரமே முதற்கட்ட உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற நிதிஷ் ரெட்டிக்கு, புதன்கிழமை அன்று பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் தேசிய கிரிக்கெட் அகாடமியில் Match Simulation சோதனை நடத்தப்பட்டது. போட்டிக்கான சூழலை உருவாக்கி, அதில் நிதிஷ் குமார் ரெட்டியை விளையாட வைத்தனர். இதில் அவர் முழுமையாக வெற்றி பெற்றுள்ளார். பந்துவீச்சிலும் அவர் அனைத்து சோதனைகளையும் கடந்துள்ளதால், நீண்ட ஓவர்கள் வீசுவதற்கு முழு தகுதியுடன் உள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.
நிதிஷ் ரெட்டியின் உடற்தகுதி இந்திய அணிக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. ஏனெனில், ஆப்கானிஸ்தான் தொடர் மட்டுமின்றி, செப்டம்பர் 22 அன்று ஜப்பானுக்கு எதிராக விளையாடவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியிலும் அவர் இடம் பிடித்துள்ளார்.
2024 அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான நிதிஷ் ரெட்டி, தர்மசாலாவில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் காயம் அடைந்தார். இதனால் அயர்லாந்து, இங்கிலாந்து, ஜிம்பாப்வே மற்றும் இலங்கை டெஸ்ட் தொடர்களை அவர் தவறவிட நேர்ந்தது.
இதுவரை 4 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில், பிளேயிங் லெவனில் தனக்கான இடத்தைப் பிடிக்க சிவம் துபேவுடன் போட்டியிடுவார்.