📅 Friday, 25 September 2026 IST | புரட்டாசி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 25, 2026 11:04 AM

ஆசியான் நிறுவனங்களுக்கு திறன் மேம்பாடு அவசியம்: துணைப் பிரதமர்

ஆசியான் நிறுவனங்களுக்கு திறன் மேம்பாடு அவசியம்: துணைப் பிரதமர்

சிங்கப்பூர்-சீனா ஒத்துழைப்பின் பலன்கள் தென்கிழக்கு ஆசியா முழுவதும் விரிவடைய வேண்டும் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் வலியுறுத்தியுள்ளார்.

வர்த்தக, தொழில்துறை அமைச்சருமான கான், வியாழக்கிழமை தொடங்கிய ‘சிங்கப்பூர்-சீனா இருநாட்டு உறவுகள்’ வர்த்தகக் கருத்தரங்கத்தின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) காலை சிறப்புரையாற்றினார்.

வலுவான, மீள்திறன்மிக்க ஆசியான் கூட்டமைப்பை உருவாக்குவது சிங்கப்பூர், சீனா ஆகிய இரு நாடுகளின் பொதுவான முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று கூறிய அவர், ஆசியான் நிறுவனங்கள் தொழில்துறை மேம்பாட்டை அடைவதில் முன்பைவிடக் கடினமான சூழலை எதிர்கொண்டு வருகின்றன என்றார்.

திறனை வளர்ப்பதே வளர்ச்சியின் திறவுகோல்

சீனா ஆழமான தொழில்நுட்ப, உற்பத்தித் திறன்களைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் சிங்கப்பூர் நிதி, இணைப்புத்தன்மை வாய்ந்த திட்டச் செயல்பாடு போன்ற துறைகளில் பலம் வாய்ந்ததாக இருக்கிறது என்று திரு கான் குறிப்பிட்டார்.

தானியக்கமயமாக்கல் வேகமாகப் பரவி வருவதால், குறைந்த விலையில் மனிதவளத்தை வழங்குவது இனி வட்டார நாடுகளுக்கு மிகப்பெரிய நன்மையாக இருக்காது என்று சுட்டிய துணைப் பிரதமர், ‘‘அதேநேரம் மின்னிலக்கத் தளங்கள் புதிய சந்தைகளைத் திறந்துவிட்டாலும், அவை கடுமையான போட்டியையும் கொண்டுவந்துள்ளன,’’ என்றார்.

முதலீடு மட்டுமே வாய்ப்புகளைக் கைப்பற்றுவதற்குப் போதுமானவையல்ல என்பதே திரு கானின் உரையில் முன்னிலை வகித்தது.

எனவே, உள்ளூர்த் தொழில் நிறுவனங்கள் உற்பத்தி முதல் சந்தைப்படுத்துதல் வரையிலான மதிப்பைக் கணிக்கும் அளவீட்டில் உயர்நிலைக்குச் செல்ல உதவ வேண்டும் என்றும் அங்கு உருவாகும் புதிய பணிகளை ஏற்றுக்கொள்வதற்கு ஏற்ப ஊழியர்களுக்குத் தேவையான புதிய திறன்களைக் கற்றுத்தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

வாய்ப்புகள் கைகூட வேண்டும்

ஆசியான்-சீனா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேம்படுத்துவதன் ஒரு பகுதியாக உள்ள மின்னிலக்கம், பசுமைப் பொருளியல், விநியோகச் சங்கிலி இணைப்பு ஆகியவற்றுக்கான உறுதிமொழிகள், வர்த்தகங்கள் தொழிலாளர்களுக்கான நடைமுறை வாய்ப்புகளாக மாற்றப்பட வேண்டும் என்று திரு கான் வலியுறுத்தினார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

2025ஆம் ஆண்டில் சீனாவுக்கும் ஆசியானுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் முதன்முறையாக 1 டிரில்லியன் அமெரிக்க டாலரைக் கடந்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் 2027ம் ஆண்டில் ஆசியான் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்கும்போது, ஆசியானுக்குள் ஒருங்கிணைப்பை ஆழப்படுத்த முழுவீச்சில் செயல்படும் என்று சொன்ன துணைப் பிரதமர் கான், உலகளாவிய நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்கத் தயாராய் இருத்தல், எதிர்காலத்தை வடிவமைக்கும் திறன்கள், செயல்பாட்டு உரிமை ஆகியவற்றைக் கொண்ட ஆசியானையே சிங்கப்பூர் விரும்புகிறது என்றார்.