📅 Thursday, 03 September 2026 IST | ஆவணி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 03, 2026 10:03 AM

ஆசிரியர்கள் மற்றும் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து!

ஆசிரியர்கள் மற்றும் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து!

சென்னை: தி.மு.க., ஆட்சியின்போது, விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக, சட்டசபையில் 110 விதியின் கீழ், முதல்வர் விஜய் அறிவித்தார். சட்டசபையில், தமிழக முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பு:

சட்டத்திற்குட்பட்டு, தங்கள் கோரிக்கைகளை, மக்கள் முன்வைப்பதற்கான சூழலை, அரசு உறுதிப்படுத்தி வருகிறது.

முந்தைய ஆட்சியில், தங்களது வாழ்வாதாரம், உரிமைகள், சமூக நலன் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து போராடிய, விவசாயிகள், ஆசிரியர்கள் மீது, 2021 முதல் 2026 ஏப்ரல் வரை, ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ஜனநாயக முறையில் குரல் கொடுத்த மக்களுக்கு, அனுமதி மறுக்கப்பட்டதோடு, அவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளால், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

திருவண்ணாமலையில், 'சிப்காட்' தொழிற்பேட்டை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது, குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டது.

பரந்துாரில் புதிய விமான நிலைய திட்டத்தைக் கைவிடக் கோரி போராடிய விவசாயிகள் மீதும், முந்தைய அரசால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஆசிரியர்கள், தங்கள் நியாயமான கோரிக்கைகளுக்காக, ஜனநாயக முறையில் போராடியபோது, அவர்கள் மீதும் பதிவான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

எனவே, ஜனநாயக உரிமைகளை மதிக்கும் இந்த அரசு, கடந்த ஆட்சியாளர்களால் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து, சட்டசபையில் நடந்த விவாதம்:

தி.மு.க., - வேலு: முதல்வர் விஜய், 'முந்தைய ஆட்சியில் போராடியோர் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும்' என அறிவித்ததில், எங்களுக்கு மாற்று கருத்து இல்லை. ஆனால், சிப்காட் மற்றும் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த வேண்டி உள்ளது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்கள் நடக்கும்போது, சட்டம் - - ஒழுங்கை பாதுகாக்க, காவல் துறையை பயன்படுத்தி வழக்கு பதியப்படுகிறது. த.வெ.க., ஆட்சியில், காவல் துறையை வைத்து வழக்கே பதிய மாட்டீர்களா?

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: 'நீட்' தேர்வுக்கு எதிராக போராடிய இளைஞர்கள் மீதான வழக்குகளை, உச்ச நீதி மன்றம் ரத்து செய்து உள்ளது.

அரசு சொல்லும்போது, வழக்குகளை நீதிமன்றம் ரத்து செய்யும். விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், முதல்வரை சந்தித்து வைத்த கோரிக்கை அடிப்படையில், வழக்குகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

அமைச்சர் நிர்மல்குமார்: போராட்டங்களை ஒடுக்கவே, முந்தைய ஆட்சியில் வழக்குகள் போடப்பட்டன. அரசு தலைமை வழக்கறிஞர் வாயிலாக, போராட்ட வழக்குகளை திரும்பப் பெற நட வடிக்கை எடுக்கப்படும்.

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி: முந்தைய ஆட்சியில் போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்வது, இது முதல் முறை அல்ல.

குடியுரிமை சட்டம், சென்னை -- சேலம் எட்டு வழிச்சாலை, வேளாண் சட்டங்கள், கூடங்குளம் அணு உலை ஆகியவற்றுக்கு எதிராக போராடியோர் மீது போடப்பட்ட, 5,000க்கும் அதிகமான வழக்குகளை, தி.மு.க., அரசு திரும்ப பெற்றது.

தி.மு.க., - எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்: த.வெ.க., ஆட்சியின் 100 நாட்களில், விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி போராடிய விவசாயிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளன. அந்த வழக்குகளும் திரும்பப் பெறப்படுமா?

இவ்வாறு விவாதம் நடந்தது.

ரூ.1,850 கோடியில் நகர சாலைகள் சீரமைப்பு சட்டசபையில் 110 விதியின் கீழ், முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்புகள்: *மதுரை, கடலுார் மாநகராட்சிகள், 9 நகராட்சிகள், 20 பேரூராட்சிகளில், குடிநீர் வசதிகளை மேம்படுத்த, 1,000 கோடி ரூபாய்; பழமையான 33 கூட்டுக் குடிநீர் திட்டங்களை சீரமைக்க, முதல் கட்டமாக, 300 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் *மதுரை மாநகராட்சியில், 40 ஆண்டு பழமையான பாதாள சாக்கடையை சீரமைக்க, 2,400 கோடி ரூபாயில் முதற்கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் *நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் குன்றத்துார், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சிகளில், 960 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் *திருநெல்வேலி, சேலம் மாநகராட்சிகளில், 547 கோடி ரூபாயில், திடக்கழிவில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் *சென்னை உட்பட அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், சேதமடைந்த சாலைகள், 1,850 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்படும் *மாநகராட்சிகளில் நடைபாதை, பள்ளி களைச் சுற்றியுள்ள சாலை மேம்பாட்டுப் பணிகள், 165 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும் *நகரப்பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க, ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும் *திருச்சி, திருப்பூர், புதுக்கோட்டை மாவட்டங்களில், 130 கோடி ரூபாயில் பெரிய பூங்காக்கள்; தமிழகம் முழுதும் 250 புதிய பூங்காக்கள், 175 கோடி ரூபாயில் அமைக்கப்படும் *நகர்ப்புற பள்ளிகளில், புதிய வகுப்பறைகள் மற்றும் நவீன வசதிகள் 335 கோடி ரூபாயில் ஏற்படுத்தப்படும் *சிதம்பரம் நடராஜர் தேர் விழாவிற்காக, ரத வீதிகளில், குடிநீர், பாதாள சாக்கடை, மின்சாரம், தொலை தொடர்பு கம்பிகளை, தரைக்கு அடியில் கொண்டு செல்லவும், வீதிகளை சீரமைக்கவும், 36 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படும் *கடலுாரில், புனித டேவிட் கோட்டை முதல், வெள்ளி கடற்கரை வரை, 8 கோடி ரூபாயில், பாரம்பரிய நடைபாதை அமைக்கப்படும்*கன்னியாகுமரி கடற்கரை பகுதியை அழகுப்படுத்தி, சுற்றுலா பயணியருக்கான வசதிகளை மேம்படுத்த, 50 கோடி ரூபாய் செலவிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செப்.,15 முதல் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் சட்டசபையில் 110 விதியின் கீழ், முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு: ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று பெற, தற்போது, 250 ரூபாய் கட்டணம் பெறப்படுகிறது. 'சிப்' பொருத்தப்பட்ட அட்டைகளாக, தபால் வாயிலாக, விண்ணப்பதாரர்களின் முகவரிக்கு ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் அனுப்பப்படுகிறது. விண்ணப்பதாரர்களுக்கு அவை கிடைப்பதற்கு, ஒரு வாரம் முதல், ஒரு மாதம் வரை கால தாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் ஆகியவற்றை, 'டிஜிட்டல்' முறையில் விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் . இந்த வசதி, தமிழகம் முழுதும், வரும் 15ம் தேதி நடைமுறைக்கு வரும். ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, அதே நாளில் டிஜிட்டல் முறையில், ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். அரசு அலுவலகங்கள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ அமைப்புகள், 'கியூ.ஆர்.' குறியீடு ஸ்கேன் செய்து, ஆவணங்களை சரி பார்க்க முடியும். இதன் வாயிலாக, போலி ஆவணங்கள் தவிர்க்கப்படும். ஓட்டுநர் உரிமம் அல்லது வாகனப் பதிவுச் சான்று தொலைந்தாலோ, சேதமடைந்தாலோ, மீண்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், அச்சிட்டுக் கொள்ளவும் முடியும். தமிழகத்தில் எந்தவொரு ஆர்.டி.ஓ., அலுவலகத்திலும் விண்ணப்பித்து, ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்று பெறும் வசதி, படிப் படியாக நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உ ள்ளது.