📅 Friday, 04 September 2026 IST | ஆவணி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 04, 2026 12:04 AM

$3 பில்லியன் கள்ளப்பண விவகாரம்: சொத்து ஏலம்

$3 பில்லியன் கள்ளப்பண விவகாரம்: சொத்து ஏலம்

சிங்கப்பூரில் மாபெரும் மோசடியான $3 பில்லியன் கள்ளப்பண விவகாரத்துடன் தொடர்புடைய மேலும் 26 சொத்துகள் செப்டம்பர் இறுதியில் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளன.

எட்மண்ட் டை அண்ட் கம்பெனி நிறுவனம், செப்டம்பர் 23ஆம் தேதி ஒன்பது சொத்துகளை ஏலம் விடுகிறது. அவற்றில் சவுத் பீச் ரெசிடன்சஸ், 8 செயின்ட் தாமஸ், பேட்டர்சன் சுவிட்ஸ் உள்ளிட்ட ஆடம்பர வீடமைப்புத் திட்டங்களைச் சேர்ந்த எட்டு சொகுசு வீடுகளும், சூன் லி தொழிற்பேட்டையில் உள்ள ஓர் அலுவலக இடமும் அடங்கும்.

சவுத் பீச் ரெசிடன்சஸ் பிரிவில் ஐந்து வீடுகள் $4.45 மில்லியன் முதல் $25.3 மில்லியன் வரையிலான வழிகாட்டி விலையில் ஏலம் விடப்படுகின்றன. 8 செயின்ட் தாமசில் உள்ள இரண்டு வீடுகள் $4.4 மில்லியன் முதல் $5.7 மில்லியன் வரையிலும், பேட்டர்சன் சுவிட்சில் உள்ள ஒரு வீடு $5.2 மில்லியனுக்கு ஏலம் விடப்படவுள்ளன. காக்கி புக்கிட்டில் உள்ள சூன் லி தொழிற்பேட்டையின் அலுவலக இடம் $3.6 மில்லியன் வழிகாட்டி விலையைக் கொண்டுள்ளது.

எஸ்ஆர்ஐ நிறுவனம் செப்டம்பர் 23ஆம் தேதி வாலிக் ரெசிடன்ஸ், மார்ட்டின் மாடர்ன் இடங்களில் உள்ள 10 சொகுசு வீடுகளை $2.2 மில்லியன் முதல் $6.8 மில்லியன் வரையிலான வழிகாட்டி விலையில் ஏலத்திற்கு விடுகிறது.

நைட் ஃபிராங்க் நிறுவனம் செப்டம்பர் 17ஆம் தேதி கிராமர்சி பார்க்கில் நான்கு வீடுகள், ஸ்லோன் ரெசிடன்சஸில் இரண்டு வீடுகள், சன்டெக் டவர் ஒன்னில் ஓர் அலுவலக இடம் ஆகியவற்றை ஏலம் விடுகிறது.

இவ்வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 80க்கும் மேற்பட்ட சொத்துகளும் 1,000க்கும் மேற்பட்ட நகைகள், சொகுசுக் கடிகாரங்கள் போன்ற பொருள்களும் படிப்படியாக ஏலத்திற்கு வரும் என்று டெலாய்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் கிடைக்கும் விற்பனைத் தொகை முழுவதும் அரசாங்கத்தின் தொகுப்பு நிதியத்தில் செலுத்தப்படும்.