1,000 ஏசி மின்சார பஸ்கள் கொள்முதலில் என்னதான் நடக்குது? டெண்டர் ரத்தை மறுநாளே வாபஸ் பெற்றது அரசு
சென்னை: சென்னையில் 1,000 'ஏசி' மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை ரத்து செய்த தமிழக அரசு, மறு நாளே ரத்து அறிவிப்பை திரும்ப பெற்றுள்ளது. 'தவறுதலாக டெண்டர் ரத்து செய்யப்பட்டுவிட்டது. அவற்றை வாபஸ் பெறுகிறோம். டெண்டருக்கான காலக்கெடுவை நவ., 4 வரை நீட்டிக்க வேண்டும்' என, தேசிய தகவல் மையத்திற்கு, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் கடிதம் எழுதியுள்ளது.
சென்னையில் அதிகரித்து வரும் பயணியரின் போக்குவரத்து தேவையைச் சமாளிக்கும் வகையில், எம்.டி.சி., எனும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், தன் பேருந்து சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டது.
அதன்படி, கடந்த தி.மு.க., ஆட்சியில், தனியார் பங்களிப்புடன், ஜி.சி.சி., எனப்படும் மொத்த செலவு ஒப்பந்த அடிப்படையில், 1,000 புதிய 'ஏசி' மின்சார பேருந்துகள் இயக்க, 'டெண்டர்' வெளியிடப்பட்டது.
சட்டசபை தேர்தலுக்கு முன், கடந்த மார்ச் மாதம், இந்த டெண்டர் வெளியிடப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, இந்த டெண்டரை திறக்கும் தேதி பல முறை ஒத்தி வைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நிர்வாக காரணங்களை குறிப்பிட்டு, இந்த டெண்டர் ரத்து செய்யப்படுவதாக, எம்.டி.சி., நிர்வாகம் நேற்று முன்தினம் அறிவித்தது. நிர்வாக ஒப்புதல் பெறாமல், கடந்த ஆட்சியில் டெண்டர் விடப்பட்டதாகவும், அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஜெர்மனியின் வளர்ச்சி வங்கியான கே.எப்.டபிள்யூ., நிதியுதவியுடன், 500 மின்சார பேருந்துகளை வாங்குவதற்கான முந்தைய டெண்டரும், ஏற்கனவே ரத்து செய்யப்பட்டது.
பயணியருக்கான போக்குவரத்து சேவையை அதிகப்படுத்த வேண்டிய நிலையில், ஏற்கனவே விடப்பட்டிருந்த பல டெண்டர்கள் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டு வருவதால், புதிய பேருந்துகளை கொண்டு வருவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது குறித்து, நம் நாளிதழில் நேற்று விரிவான செய்தி வெளியானது.
இந்நிலையில், டெண்டர் ரத்து அறிவிப்பை ஒரே நாளில், எம்.டி.சி., நிர்வாகம் நேற்று திரும்ப பெற்றுள்ளது.
இதுகுறித்து, என்.ஐ.சி., எனும் தேசிய தகவல் மையத்திற்கு, சென்னை மாநகர போக்குவரத்து கழக தலைவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சென்னையில், 1,000 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர், தவறுதலாக ரத்து செய்யப்பட்டுவிட்டது. எனவே, அந்த ரத்து நடவடிக்கையை வாபஸ் பெற்று, டெண்டரை பழைய நிலைக்கே கொண்டு வர வேண்டும்.
மேலும், டெண்டரை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு, நவ., 4 வரை நீட்டிக்க வேண்டும். இந்த முடிவால் ஏற்படும் சட்டப்பூர்வ விளைவுகளுக்கு, சென்னை மாநகர போக்குவரத்து கழகம், முழு பொறுப்பேற்கும். இதனால், எவ்வித சட்டமீறலும் ஏற்படாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு, பயணியரை அழைத்துச் செல்லவும், அங்கிருந்து அவர்களின் இருப்பிடங்களுக்கு இணைப்பு போக்குவரத்து வசதியை வழங்கவும், 220 எண்ணிக்கையில், 'ஏசி' சிறிய வகை தாழ்தள மின்சார பேருந்துகளை இயக்கவும், எம்.டி.சி., மறு டெண்டர் கோர உள்ளது.